Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புதுச்சேரி மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததில் கடும் மோதல் கடலோர பாதுகாப்பு படையினர் பழவேற்காடு கடலில் தீவிர ரோந்து: 10 பேர் மீது வழக்குப்பதிவு; அதிகாரிகள் பேச்சுவார்த்தை

பொன்னேரி: புதுச்சேரி மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்த விவகாரத்தில் கடும் மோதல் ஏற்பட்ட நிலையில், பழவேற்காடு கடலில் கடலோர பாதுகாப்புப்படை தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளது. இதனிடையே, மோதல் தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சென்னை அருகே பழவேற்காட்டில் அண்மை காலமாக வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகளில் தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன் பிடிப்பதாக புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக, புதுச்சேரி, பூம்புகார், காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடந்த 30ம் தேதி மீன்பிடிக்க வந்தபோது பழவேற்காடு மீனவர்களுக்கும், காரைக்கால் மீனவர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து 41 படகுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் திருப்பாலைவனம் காவல்துறையினர் இரு தரப்பினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி படகுகளை விடுவித்தனர். இந்நிலையில் நேற்று புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் பழவேற்காடு கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க வந்தபோது பழவேற்காடு மீனவர்களுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டது. பழவேற்காட்டைச் சேர்ந்த மீனவர்கள் லோகேஷ், பிரதாப் படுகாயம் அடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் எல்லை மீறி பிற மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை தடை செய்ய வேண்டும் எனக் கூறி பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இது சம்பந்தமாக மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரா, செங்குன்றம் காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜ்குமார், உதவி ஆணையர் ராஜா ராபர்ட், பொன்னேரி தாசில்தார் மதிவாணன், திருப்பாலைவனம் இன்ஸ்பெக்டர் முருகேசன், கடலோர காவல் படை உதவி ஆய்வாளர் சபாபதி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பிற மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகு, தடை செய்யப்பட்ட சுருக்க வலைகளை பயன்படுத்தக் கூடாது, அவர்களை தடை செய்ய கடலோர பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்பது பழவேற்காடு மீனவர்களின் கோரிக்கை.

மேலும் கடலோர பாதுகாப்பு படையினர் மூலமாக பிற மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பழவேற்காடு எல்லைக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பழவேற்காடு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதை தொடர்ந்து, புதுச்சேரி மீனவர்கள் 10 பேர் மீது திருப்பாலைவனம் போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், பழவேற்காடு கடலில் உள்ளூர் மீனவர்களுக்கும், புதுச்சேரி மீனவர்களுக்கும் ஏற்பட்ட மோதலை தடுக்க, வெளிமாநில மீனவர்கள் பழவேற்காடு கடல் பகுதிக்குள் எல்லை மீறி நுழையாத வகையில் கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.