Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அண்ணன் மகளை காதலித்ததை கண்டித்த சலூன் கடைக்காரர் வெட்டிக்கொலை: 2 பேர் கைது

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் மேல்கரை வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் (38). இவர் கனகசபை நகர் காசி மட தெருவில் சலூன் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 11.45 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட இருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், கடைக்குள் புகுந்து காளிதாஸை சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் நடத்திய விசாரணையில், காளிதாசின் உறவினரான புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த மணி (எ) வேல்மணி (23) ஒரு வருடமாக அவரது வீட்டில் தங்கி சலூன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது காளிதாசின் அண்ணன் மகளுக்கும், வேல்மணிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் உறவுமுறையில் அண்ணன், தங்கை என்பதால், காளிதாஸ் மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வேல்மணியை, சில மாதங்களுக்கு முன் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த வேல்மணி தனது நண்பர் விக்கி (எ) விக்னேஷ் (21) என்பவருடன் நேற்றுமுன்தினம் இரவு பைக்கில் வந்து, காளிதாசை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து நேற்று காலை சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த வேல்மணி, விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.