செங்கல்பட்டு: செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்கு வந்த வாலிபரிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை காசிமேடு திடீர் நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி என்பவரது மகன் அகேஷ் (28). இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று காலை இவர்மீது உள்ள கொலை வழக்கு சம்மந்தமாக வழக்கு விசாரணைக்காக அகேஷ் செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.
அப்போது, நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீசார் அகேஷ் சோதனை செய்தனர்.
அப்போது, அவரது பேன்ட் பாக்கெட்டில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அகேஷ் கைது செய்து செங்கல்பட்டு டவுன் காவல் நிலையம் கொண்டு வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கொலை வழக்கு சம்பந்தமாக நீதிமன்ற விசாரணைக்காக வந்ததாகவும், தனது உபயோகத்திற்காக 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

