Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மரக்காணம் அருகே மனைவியை எரித்து கொன்று நாடகமாடிய கணவனுக்கு ஆயுள்தண்டனை

*விழுப்புரம் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

விழுப்புரம் : மரக்காணம் அருகே மனைவியை எரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எம்.புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்லகண்ணு மனைவி ஞானாம்பாள் (65). இவர்களுக்கு திருமணமாகி 2 பெண், 1 மகன் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி ஞானாம்பாள் (65) வீட்டில் உடல் எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அவரது மகன் ஆனந்தன், மரக்காணம் காவல்நிலையத்தில் புகார்அளித்தார்.

அதில் வயிற்றுவலி காரணமாக தனது தாய் மண்ணெண்ணை ஊற்றி இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். கணவர் செல்லகண்ணும் ஞானாம்பாள் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். பின்னர் ஞானாம்பாள் இறந்து கிடந்த இடத்தை பார்த்தபோது சந்தேகமடைந்த போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதில் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்து உடலை எரித்துள்ளது தெரியவந்தது. பின்னர் சந்தேகத்தின் பேரில் செல்லகண்ணுவை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது மனைவியை தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். ஞானாம்பாள் பெயரில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தினை தனது பெயருக்கு எழுதி கொடுக்கும்படி செல்லக்கண்ணு வலியுறுத்தி வந்தாராம்.

இதனை தரமறுத்ததால் சம்பவத்தன்று மனைவி என்றும் பாராமல் ஞானாம்பாள் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு பின்னர் அவரது உடலை மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து கொளுத்தி உள்ளார். பின்னர் வெளியே சென்று தன் மனைவி வயிற்றுவலி தாங்க முடியாமல் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது. தொடர்ந்து கொலைவழக்கு பதிவு செய்து கணவர் செல்லக்கண்ணுவை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி இளவரசன் நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட செல்லக்கண்ணுவுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட செல்லக்கண்ணு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.