பெரம்பூர்: கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் (35). இவர், கொளத்தூர் அனுஷியா நகர் சந்திப்பு பகுதியில் தங்க நகை செய்து விற்பனை செய்யும் ஜூவல்லரி நடத்தி வருகிறார். இங்கு, கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் குட்டம் குளம் பகுதியை சேர்ந்த ராபின் (43) என்பவர், கடந்த 10 வருடங்களாக நகை செய்யும் ஆச்சாரி வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாக இவர், தங்கத்தில் பித்தளையை கலந்து ஏமாற்றி வந்துள்ளார். இதனை, கடையின் மேலாளர் எத்திராஜ் சமீபத்தில் கண்டுபிடித்து, இதுகுறித்து ராஜமங்கலம் குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஆச்சாரி ராபின் தங்க கட்டிகளை எடுத்து நகை செய்யும்போது, அதில் சிறிதளவு தங்கத்தை அபேஸ் செய்துவிட்டு, பித்தளை கலந்து ஏமாற்றி வந்தது தெரிய வந்தது. இவ்வாறு அவர் சேகரித்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை ஒரு நகைக்கடையில் கொடுத்து செயினாக மாற்றியதும் தெரிய வந்தது. இதையடுத்து, ராபினை கைது செய்து, அவரிடம் இருந்து 45 கிராம் தங்கத்தை மீட்டுள்ளனர். பின்னர், அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


