Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இடைப்பாடி அருகே பரபரப்பு பலாத்கார முயற்சியில் கழுத்து நெரித்து பெண் படுகொலை

*வீடு புகுந்து ஆட்டு வியாபாரி வெறிச்செயல்

இடைப்பாடி : இடைப்பாடி அருகே, பலாத்கார முயற்சியில் பெண் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆட்டு வியாபாரியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் குரும்பப்பட்டி ஊராட்சி காளிகவுண்டன் வளவு பகுதியை சேர்ந்தவர் மாதையன் (50). ஆட்டு வியாபாரியான இவரது மனைவி சின்னப்பொண்ணு(46). இவர்களுக்கு விக்னேஷ்(29) என்ற மகனும், ஜமுனா(25) என்ற மகளும் உள்ளனர்.

விக்னேஷின் மனைவி கோகுலப்பிரியா. கோகுலப்பிரியாவின் தம்பி விபத்தில் உயிரிழந்து விட்டதால், விக்னேஷூடன் துக்கம் விசாரிப்பதற்காக சென்று விட்டார். மாதையன் சந்தையில் ஆடுகள் வாங்குவது தொடர்பாக வெளியில் சென்று விட்டார்.

இதனால், நேற்று முன்தினம், சின்னப்பொண்ணு மற்றும் மகள் வழி பேத்தியான 7 வயது சிறுமி ஆகியோர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர். அவர்களுக்கு துணையாக மாதையனின் அண்ணன் வெங்கடாசலம் இருந்தார்.

இரவு 3 பேரும் சாப்பிட்டு விட்டு படுக்கைக்கு சென்றனர். முன் முற்றத்தில் கட்டில் போட்டு வெங்கடாசலம் படுத்திருந்தார். வீட்டிற்குள் பேத்தியுடன் சின்னப்பொண்ணு தூங்கிக் கொண்டிருந்தார்.

சந்தைக்கு சென்ற மாதையன் நேற்று காலை வீடு திரும்பிய போது, வீட்டில் சின்னப்பொண்ணு ஆடைகள் கிழிந்த நிலையில், நகக்கீறல் காயங்களுடன் இறந்து கிடந்தார். சிறுமி கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தாள். மேலும், முற்றத்தில் படுத்திருந்த வெங்கடாசலத்தை காணவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த சங்ககிரி டிஎஸ்பி சிந்து, கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர், சின்னப்பொண்ணுவின் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், பலாத்கார முயற்சியில் சின்னப்பொண்ணு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், அருகிலேயே அவரது பேத்தி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, நன்கு அறிமுகமானவர்தான், வீடு புகுந்து வெறிச்செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

இதில், பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஆட்டு வியாபாரி காவேரி(43) என்பவரின் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து, அவரை பிடித்து விசாரித்ததில், சின்னப்பொண்ணு கொலையில் அவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. நீண்ட நாட்களாக சின்னப்பொண்ணு மீது காவேரிக்கு ஒரு கண் இருந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில், அவரிடம் தொடர்ந்து அத்துமீறி வந்துள்ளார். மேலும், தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

சின்னப்பொண்ணு வீட்டில் இருந்து வெளியில் வரும் சமயங்களிலும், விவசாய தோட்டத்திற்கு செல்லும் வேளையிலும், காவேரி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதற்கு சின்னப்பொண்ணு மறுத்துள்ளார். இந்நிலையில், சின்னப்பொண்ணு வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றிருப்பதை அறிந்த காவேரி, தனது மனைவி மற்றும் குழந்தைகளை, தர்மபுரி காலபைரவர் கோயிலுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நேற்று அதிகாலை எழுந்து, சின்னப்பொண்ணுவின் வீட்டிற்கு சென்று, முன் முற்றத்தில் படுத்திருந்த வெங்கடாசலத்தை தட்டி எழுப்பி, கொங்காணபுரத்தில் உள்ள சந்து கடையில் மது வாங்கி கொடுத்துள்ளார்.

வயிறு முட்ட மது குடித்த வெங்கடாசலம், அங்கேயே மட்டையான நிலையில், காவேரி மட்டும் திரும்பி வந்து, வீடு புகுந்து படுத்திருந்த சின்னப்பொண்ணுவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் ஆசைக்கு இணங்க மறுத்ததால், பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். தொடர்ந்து அவர் மறுக்கவே, கழுத்தை பிடித்து நெரித்ததில் உயிரிழந்தது தெரிய வந்தது.

சந்து கடை பகுதியில் மட்டையாகி கிடந்த வெங்கடாசலத்தை தட்டி எழுப்பி விசாரித்தபோது, தன்னை காவேரி அழைத்துக் கொண்டு வந்து மது வாங்கி கொடுத்ததாக தெரிவித்தார். அதன் பேரில், காவேரியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், குட்டு வெளிப்பட்டது.

இதையடுத்து, காவேரியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சின்னப்பொண்ணுவின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ள நிலையில், பாலியல் பலாத்கார முயற்சியில் சின்னப்பொண்ணு கொலை செய்யப்பட்டாரா அல்லது பலாத்காரத்தால் உயிரிழந்தாரா என விசாரித்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.