Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கள்ளக்காதலுக்கு இடையூறு பெண் குழந்தை கொலை: தாய், 2 ஆண் நண்பர்களிடம் போலீசார் விசாரணை

திசையன்விளை: தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால், இரண்டரை வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது தொடர்பாக தாய், அவரது 2 ஆண் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்தவர் பிருந்தா (27). இவரது கணவர் வெளியூரில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு தர்ஷினி என்ற இரண்டரை வயது பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் பிருந்தா நடுவக்குறிச்சியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று, குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு தாய் குழந்தை எப்படி இறந்தது? என கேட்டுள்ளார். கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக பிருந்தா கூறியுள்ளார். சந்தேகமடைந்த தாய் உடனடியாக குழந்தை தர்ஷினியை நேற்று மதியம் திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். குழந்தையை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் உதடு மற்றும் உடலில் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து திசையன்விளை போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பதால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதைதொடர்ந்து தாய் பிருந்தாவிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். இதில் மகாதேவன்குளம் அருகே வாழை தோட்டத்திற்கு நேற்று முன்தினம் இரவு பிருந்தா தனது 2 ஆண் நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது ஆண் நண்பர் ஒருவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு மற்றொரு ஆண் நண்பருடன் தனியாக இருந்துள்ளார். அதிகாலை 3 மணியளவில் இறந்த நிலையில் குழந்தையை தாய் பிருந்தாவிடம் ஆண் நண்பர் ஒப்படைத்துள்ளார். குழந்தை எப்படி இறந்தது என்று கேட்டதற்கு அவர் உரிய பதில் அளிக்கவில்லை. அதன்பிறகு மறுநாள் காலையில் பிருந்தா குழந்தையை நடுவக்குறிச்சியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு கொண்டு சென்றதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. தகாத உறவுக்கு குழந்தை இடையூறாக இருந்ததால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதைத் தொடர்ந்து பிருந்தாவின் ஆண் நண்பர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.