திருவொற்றியூர்: மாதவரம், பொன்னியம்மன்மேடு, சி.ராமன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் வசித்து வருபவர் ஷாஜகான் (50). தொழிலதிபரான இவர், ரெட்டேரியில் மீன்களுக்கான உணவு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், அதே பகுதியில் புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்வதற்காக, கடந்த 28ம் தேதி, அவர் வசித்து வந்த வீட்டை பூட்டி விட்டு, புதிய வீட்டிற்கு சென்றார்.
பின்னர், அங்கிருந்து தனது வீட்டிற்கு ஷாஜகான் சென்றபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 85 சவரன் நகை மற்றும் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த கார் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து மாதவரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.
அதில், ஊத்துக்கோட்டை அடுத்த பெரியபாளையத்தை சேர்ந்த தீனா (எ) முருகன் (25) என்பவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. பாண்டிச்சேரியில் பதுங்கி இருந்த முருகனை, போலீசார் கைது செய்தனர். இவர் மீது வீடுகளின் பூட்டை உடைத்து திருடுவது, வழிப்பறி போன்ற 14 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிந்தது. அவரிடம் இருந்து 29 சவரன் நகை, 1 கார், 2 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

