Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

போதைக்காக வலி நிவாரணி மாத்திரை விற்ற 2 பேர் கைது

பள்ளிபாளையம் : சேலம் மாவட்டம் சங்ககிரி சிமெண்ட் ஆலை பகுதிகளில் 2 பேர், போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விற்பனை செய்து வருவதாக வெப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், எஸ்ஐ செந்தில்குமார், ஏட்டு பிரவீன்குமார், சரவணன் ஆகியோர் பச்சாம்பாளையம் பகுதியில் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளி கிரிகரன், அவரது நண்பர் முருகேசன் டூவீலரில் வந்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை போலீசார் சோதனையிட்டனர். இதில் அவர்களின் பேன்ட் பாக்கெட்டில் 40 மாத்திரைகள் இருந்தன. இந்த மாத்திரைகள் அனைத்தும் மருத்துவர்கள், அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு வழங்கும் வலி நிவாரணி மாத்திரைகள் என தெரியவந்தது.

ஆன் லைனில் இந்த மாத்திரைகளை வாங்கி அதை போதை மாத்திரையாக விற்பனை செய்து வந்துள்ளது தெரியவந்தது. இளைஞர்கள் பலரும் இந்த மாத்திரைகளை விலை கொடுத்து வாங்கி தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொண்டு போதைக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். இதையடுத்து அவர்களிடமிருந்து 40 மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து கிரிகரன் (29), முருகேசன் (23) ஆகியோரை கைது செய்து குமாரபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

சேலத்தில் 6 பேர் கைது: சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் போதை மாத்திரைகளை புழக்கத்தில் உள்ளதாக இன்ஸ்பெக்டர் தேவராஜனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீமான் தியேட்டர் ஜங்சன் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 6 பேரை மடக்கி விசாரித்தனர்.

இதில், சூரமங்கலம் தர்மன்நகர் கவுதம்(எ) சந்தோஷ்(24), சந்தைப்பேட்டை தட்சிணாமூர்த்தி(23), பெரியார் நகர் அர்சுணன்(27), பள்ளப்பட்டி கோரிக்காடு தனிஷ்(25), ஜான்சன்பேட்டை கிழக்கு தெரு தங்கபாண்டியன்(எ)சூரியா(21), அய்யம் பெருமாம்பட்டி பிரசாந்த்(எ)அனு (24) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

அவர்களை சோதனை செய்தபோது 760 வலி மாத்திரைகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை போதை மாத்திரையாக விற்பனை செய்துள்ளனர். இக்கும்பலுக்கு கவுதம் தான் தலைவராக இருந்துள்ளார். இவர் மும்பைக்கு சென்று அங்கிருந்து இந்த போதை மாத்திரைகளை வாங்கி வந்துள்ளார். கைதான 6 பேரையும் கோர்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைக்கும் வேலையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.