Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு சாகும் வரை ஆயுள்

*ஊட்டி மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஊட்டி : ஊட்டியில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி மகளிர் விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே பகுதியை சேர்ந்தவர் பிரமோத் குட்டன் (26). கூலி தொழிலாளி. கடந்த 2020ம் ஆண்டு இவருடைய பள்ளி தோழி ஒருவரின் மூலம், அவருடைய 17 வயது தோழி பிரமோத் குட்டனுக்கு அறிமுகமானார்.

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இல்லாத நிலையில், பிரமோத் குட்டன் அந்த 17 வயது சிறுமியை ஊட்டி உள்ள அரசு தாவரவியல் பூங்காவுக்கு அழைத்து சென்றும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். ஆனால் இது குறித்து அவர் யாரிடமும் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் 2021ம் ஆண்டு அந்த சிறுமி கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரி விடுதியில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்து இறந்தது. இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கு ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து பிரமோத் குட்டனை கைது செய்தனர்.

இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் பிரமோத் குட்டன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி எம்.செந்தில்குமார் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார்.