இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமின்றி, சர்வதேச அளவிலான டி20 கிரிக்கெட் ரசிகர்களையும் வெகுவாக கவரும் ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக இன்று துவங்க உள்ளன. 2008ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் என்ற பெயரில் டி20 தொடராக துவங்கிய இந்தத் தொடர் 18 ஆண்டுகளாக கிரிக்கெட் ரசிகர்களை பரவசப்படுத்தி வந்தது. தற்போது 19வது ஐபிஎல் தொடர் டி20 ஸ்பெஷலிஸ்ட் வீரர்களின் வாண வேடிக்கைகளை ரசிகர்களுக்கு அளிக்க தயாராகி விட்டது. 7 இந்திய வீரர்கள், 4 வெளிநாட்டு வீரர்கள் என கிரிக்கெட் அரங்கில் புதுமையான ஒரு செட்டப்போடு அறிமுகமான இத்தொடர் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.
19 வயதிற்குட்பட்ட இந்திய இளம் அணி வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். இது உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் சொர்க்கபுரி என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுகிறது. கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு ஏப்ரல், மே மாதங்களில் இப்போட்டிகள் களைகட்டும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக போட்டிகளை ரசிப்பார்கள். இன்று பெங்களூரூ எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் துவக்கப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதிரடியான வீரர்களை கொண்டுள்ளது. கடந்த ஐபிஎல்லில் ரன் மழை பொழிந்த இந்த அணிக்கு இம்முறையும் துவக்க வீரர்களாக களமிறங்கும் அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் ஜோடி அதிரடி காட்டுமென உறுதியாக எதிர்பார்க்கலாம். இவர்களோடு டி20 உலகக் கோப்பையில் கலக்கிய இஷான் கிஷான், தென் ஆப்ரிக்காவின் அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசன், இங்கிலாந்து ஆல்வுரண்டர் லியம் லிவிங்ஸ்டன், ஆல்ரவுண்டர்கள் நிதிஷ்குமார் ரெட்டி, அன்கித் வர்மா ஆகியோரின் அதிரடியும் சேர்ந்தால், இம்முறையும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சாதனை நிகழ்த்தும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
கடந்தாண்டை போலவே இம்முறையும் சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ, குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ் என 10 அணிகள் பங்கேற்கின்றன. இம்முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் எம்.எஸ்.டோனி களமிறங்க உள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் தள்ளியுள்ளது. இத்தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பெற்றுள்ளன.
இந்த அணிகள் இதுவரை தலா 5 முறை கோப்பை வென்றுள்ளன. கடந்த முறை எதிர்பாராவிதமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதன்முறையாக கோப்பையை வென்று ஐபிஎல்லில் எதுவும் நடக்குமென நிரூபித்து காட்டியது. கால்பந்து போட்டிகள் ஸ்டைலில் இம்பாக்ட் பிளேயர் விதியானது ஐபிஎல் போட்டியை மேலும் சுவாரஸ்யமாக்குவதாக கிரிக்கெட் விமர்சகர்கள், ரசிகர்கள் கருதுகின்றனர். தமிழகம் உள்பட சில மாநிலங்களில் தேர்தல் திருவிழா களைகட்டத் துவங்கியுள்ள நிலையில், ஐபிஎல் திருவிழாவையும் கண்டுகளிக்க ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். இன்று துவங்கி சுமார் 2 மாதங்கள் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை கொண்டாட தயாராகி விட்டீர்களா ரசிகர்களே...!
