Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கிரிக்கெட் போட்டிகளின் போது வெளியாகும் 'ஆபாச விளம்பரங்களை' உடனடியாக தடை செய்யக் கோரி ஐசிசி-க்கு சிடிஐ கடிதம்!

டெல்லி: தற்போது நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடரின் நேரடி ஒளிபரப்பின் போது, 'டியூரெக்ஸ் கான்டம்' போன்ற ஆபாசத் தன்மை கொண்ட விளம்பரங்கள் தடையின்றி ஒளிபரப்பப்படுவதற்கு டெல்லி மற்றும் நாட்டின் முன்னணி வர்த்தக அமைப்பான 'சேம்பர் ஆஃப் டிரேட் அண்ட் இண்டஸ்ட்ரி' (CTI) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 4ம் தேதி மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்டில் நடந்த இந்தியா - இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டி20 போட்டியின் போது ஒளிபரப்பப்பட்ட இத்தகைய விளம்பரங்கள் குறித்து CTI கவலையையும் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, CTI அமைப்பின் தலைவர் பிரிஜேஷ் கோயல் மற்றும் நிர்வாகிகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில்;

"இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல, அது ஒரு மதம் போன்றது. குழந்தைகள் உட்பட சுமார் 44 கோடி மக்கள் குடும்பத்துடன் இந்த போட்டிகளை நேரலையில் பார்க்கிறார்கள். போட்டியின் ஓவர்களுக்கு இடையே 'டியூரெக்ஸ் கான்டம்' விளம்பரங்கள் காட்டப்படுவது மிகவும் பொறுப்பற்ற செயலாகும். இது குழந்தைகளுடன் அமர்ந்து மேட்ச் பார்க்கும் பெற்றோருக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.

எனது 13 வயது மகன் என்னுடன் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தபோது, இந்த கான்டம் விளம்பரம் குறித்து என்னிடம் கேட்டார். அது எனக்கு மிகுந்த தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்கியது. இதேபோல், நாடெங்கும் லட்சக்கணக்கான பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகளுடன் மேட்ச் பார்க்கும்போது இத்தகைய சங்கடங்களை எதிர்கொள்கின்றனர். மது மற்றும் சிகரெட் விளம்பரங்களுக்கு நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற விளம்பரங்களை ஓவர்களுக்கு இடையே காட்ட எப்படி அனுமதி வழங்கப்படுகிறது?" என்று CTI கேள்வி எழுப்பியுள்ளது.

குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் நேரமான இரவு 7 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பப்படும் அனைத்து சர்வதேச போட்டிகளிலும் கான்டம், டேட்டிங் செயலிகள் மற்றும் இதர ஆபாச வகை விளம்பரங்களுக்கு ஐசிசி உடனடியாக முழு தடை விதிக்க வேண்டும் என CTI வலியுறுத்தியுள்ளது

மது மற்றும் புகையிலை விளம்பரங்களுக்கு இருப்பது போல, பிசிசிஐ மற்றும் அனைத்து உறுப்பு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் தங்களது ஒளிபரப்பு கூட்டாளர்களுடன் போடும் ஒப்பந்தத்தில் 'பேமிலி வியூவிங் கோட்' முறையை கட்டாயமாக்க வேண்டும் எனவும் விதியை மீறி இதுபோன்ற விளம்பரங்களை ஒளிபரப்பும் சேனல்கள் மற்றும் கிரிக்கெட் வாரியங்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனவும் CTI தெரிவித்துள்ளது.

குழந்தைகளின் மனநலனைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை அடுத்த ஐசிசி போர்டு கூட்டத்தில் முதன்மை Agenda-வாக எடுத்துக்கொண்டு, 30 நாட்களுக்குள் முறையான கொள்கையை வகுக்க வேண்டும் என ஐசிசி தலைவர் ஜெய் ஷாவிடம் CTI கோரிக்கை விடுத்துள்ளது. தேவைப்பட்டால், இந்த விவகாரத்தை நாடாளுமன்றம் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்ல உள்ளதாக CTI எச்சரித்துள்ளது.