சைனீஸ் சிஸ்லர்... மங்கோலியன் ரைஸ்...
சென்னையில் திரும்பும் பக்கமெல்லாம் உணவகங்கள் நிறைந்திருக்கின்றன. அதிலும், குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் அசைவப் பிரியர்களுக்கு அவர்கள் விரும்பும் உணவுகளை எந்த உணவகத்திற்கு வேண்டுமானாலும் சென்று சாப்பிடலாம். அந்தளவிற்கு அசைவ உணவகங்களின் கேந்திரமாக சென்னை விளங்குகிறது. ஒரு பக்கம் இது வரவேற்கத்தக்கது என்றாலும், சைவ உணவுப் பிரியர்களுக்கு சிறிது ஏமாற்றம் தரும்படியும் இருக்கிறது. நல்ல சைவ உணவுகள் வேண்டுமென்றால், பல இடங்களில் தேடத்தான் வேண்டி இருக்கிறது. அந்தளவிற்கு குறைந்த எண்ணிக்கையில்தான் சைவ உணவகங்கள் இருக்கின்றன. இனி அந்தக் கவலையே இல்லை என்று சொல்லும் விதமாக சைவத்தில் பல சிக்னேச்சர் உணவுகளை கொடுத்துவரும் உணவகமாக விளங்குகிறது ‘மக்கன் ரொட்டி’. சைவ உணவுகளை மட்டுமே கொடுத்துவரும் இந்த உணவகம் நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலையில் இருக்கிறது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் கன்னிமாரா நூலகத்தில் இருந்து கல்லூரி சாலைக்குச் செல்லும் சிக்னலுக்கு அருகில் இருக்கிறது. இதன் உரிமையாளர் விமல்குமாரைச் சந்தித்தோம். ``நல்ல உணவில்தான் ஆரோக்கியம் இருக்கிறது. ஆரோக்கியமான உணவுகளைக் கொடுக்க முடியாத யாருமே உணவகத்தைத் தொடங்கக்கூடாது’’ என அதிரடியாக பேசத் தொடங்கிய விமல்குமார் மேலும் தொடர்ந்தார்.
``எனக்குச் சொந்த ஊர் பெங்களூர். கல்லூரிப் படிப்பிற்காகத்தான் சென்னை வந்தேன். படித்து முடித்த வுடன் பைனான்ஸ், துணிக்கடை என பல வேலைகள் பார்த்து வந்தேன். வேறுவேறு வேலைகள் செய்து வந்தாலும் எனக்கு உணவகம் வைக்க வேண்டுமென்று சிறுவயதில் இருந்தே ஆசை இருந்தது. ஏனென்றால் உணவகம் வைக்க வேண்டும் என்பது என்னுடைய பேஷன். அதனாலேயே குக்கிங் செய்வதிலும் விருப்பம் இருந்தது. ஒரு கட்டத்தில் பார்த்துவந்த வேலையை நிறுத்திவிட்டு எனது பேஷனுக்கான வேலையைத் தொடர்ந்தேன். அப்படி உருவானதுதான் இந்த மக்கன் ரொட்டி உணவகம். மக்கன் பேடாவைப் போலவே மக்கன் ரொட்டியும் பலருக்கு பிடித்த உணவு. வட மாநிலங்களில் இந்த உணவு பிரபலமானது. அதனாலேயே எனது உணவகத்திற்கும் இந்தப் பெயரை வைத்தேன். சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவுகளில் பல வெரைட்டி இருக்கும். அதைப்போலவே, வெஜ் உணவுகளிலும் பல வெரைட்டிகள் கொடுக்க முடியும். சிக்கன் 65 போலவே பனீர் 65, சிக்கன் டிக்கா போலவே பனீர் டிக்கா, கோபி மஞ்சூரியன் என அசைவங்களுக்கு இணையான வெரைட்டிகள் சைவத்திலும் இருக்கிறது. அப்படிப்பட்ட உணவுகளைத்தான் கொடுத்து வருகிறேன். சமையலில் ஆர்வம் இருப்பதால் நானே சமையலையும் கற்றுக் கொண்டேன்.
எனது உணவகத்தில் கிடைக்கும் அனைத்து உணவுகளையும் நானும் சமைப்பேன். அந்தளவிற்கு சமையலில் ஆர்வம் அதிகம். நல்ல உணவுகளை நல்ல இடத்தில் கொடுக்க வேண்டும். அதேபோல, சாப்பிடும் உணவுகளை ஞாபகம் வைத்திருப்பது மாதிரி சாப்பிட்ட இடத்தையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். அப்படி பலரும் ஞாபகம் வைத்துக்கொள்ளும் இடமாகத்தான் எனது உணவகம் இருக்கும். ஏனெனில், எனது உணவகத்தின் இன்டீரியர் டிசைனை அனைவருக்கும் பிடித்த மாதிரி உருவாக்கி இருக்கிறேன்.எனது உணவகத்தில் வட மாநில உணவுகள் நிறைய இருந்தாலும் அதற்கு இணையாகவே சைனீஸ் உணவுகளும் இருக்கின்றன. இங்கு பல தரப்பட்ட மக்களும் சாப்பிட வருகிறார்கள். எனது உணவகத்தில் இருக்கிற மெனுவையும் அனைவருக்கும் பிடித்த வகையில் உருவாக்கி இருக்கிறேன். வெஜ் சூப்பில் இருந்து நான் ரொட்டி என பல வெரைட்டியான உணவுகள் இருக்கிறது. சூப்ஸ், சாலட்ஸ், ஸ்னாக்கர்ஸ், பீட்சா, சான்ட்வெஜ், ரோல்ஸ், டெசர்ஸ் என பல வகைகளில் உணவுகள் இருக்கிறது. இதுபோக எங்கள் உணவகத்தின் ஸ்பெஷலான வெஜ் பிரியாணியும் இருக்கிறது. இதுபோக, சைனீஸில் சில்லி பனீர், சில்லி பேபி கார்ன், ஹனி சில்லி பொட்டட்டோ, ட்ராகன் பனீர், சைனீஸ் பிளேட்டர் என இன்னும் பல உணவுகள் இருக்கின்றன.
சைனீஸில் மெயின் உணவுகள் எனப் பார்த்தால், வெஜ் ஃப்ரைடு ரைஸ், செஸ்வான் ரைஸ், சில்லி கார்லிக் ஃப்ரைடு ரைஸ், மக்கான் ரொட்டி ஸ்பெஷல் ரைஸ், வெஜ் நூடுல்ஸ், அமெரிக்கன் நூடுல்ஸ், சைனீஸ் சாப்ஸி என பல உணவுகள் இருக்கின்றன. இந்திய உணவுகளில் வெஜ் பிரியாணி, தவா பிரியாணி, தவா புலோ, ஜீரா ரைஸ் என பல மெயின் உணவுகள் இருக்கின்றன. இது இல்லாமல், பனீர் பட்டர் மசாலா, கடாய் பனீர், பனீர் டிக்கா மசாலா, பஞ்சாபி பனீர் மசாலா, வெஜ் கொல்ஹாபுரி, வெஜ் ஜெய்பூரி என வெஜ் உணவுகளில் பல ஸ்டார்டர்ஸ் இருக்கின்றன. சூப்பில் மட்டும் 10 வகைகள் இருக்கின்றன. அனைத்துமே வெஜ் சூப் தான். அதைத் தொடர்ந்து சாலட்டிலும் வெரைட்டி இருக்கிறது. எங்கள் உணவகத்தின் சிக்னேச்சர் டிஷ் ஆக மங்கோலியன் ரைஸ், பசில் ரைஸ் வித் கறி, மக்கன் ரொட்டி ஸ்பெஷல் பிரியாணி, சைனீஸ் சிஸ்லர், பனீர் பாஸ்தா, ஸ்பைசி ரைஸ் வித் வெஜ் மஞ்சூரியன் என ஐகானிக் உணவுகள் இருக்கின்றன. டெசர்ட்ஸில் மட்கா குல்பி, ப்ரவ்னி ஐஸ்கிரீம், ஃப்ரைடு ஐஸ் கிரீம், குலோப் ஜாம், ஃபலூடா என பல வகையான டெசர்ட்ஸ் இருக்கின்றன. குழந்தைகளுக்குப் பிடித்த உணவுகளும் கூட இருக்கின்றன. உணவகத்திற்கு வரும் அனைவருமே இந்த உணவுகளை என்ஜாய் செய்து சாப்பிடுகிறார்கள். குடும்பங்களோடு மீண்டும் மீண்டும் வந்து சாப்பிடுகிறார்கள். ஒரு நல்ல உணவு இதைத்தான் செய்ய வேண்டும். அந்தளவில் உணவகம் நடத்துவதில் எனக்கு மகிழ்ச்சிதான்’’ என புன்னகையுடன் பேசி முடித்தார் விமல்.
- ச.விவேக்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

