பொள்ளாச்சி: ‘டிட்வா புயல்’ காரணமாக பொள்ளாச்சி சந்தைக்கு, வெளியூர் மாடுகள் வரத்து குறைந்ததால், விற்பனையும் மந்தமானது. பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டு சந்தை நடந்து வருகிறது. இந்த சந்தையில் கடந்த 3 வாரத்துக்கு முன்பு வரை ரூ.230 கோடி வரை வர்த்தகம் நடந்து வந்தது. அதன்பின் கடந்த 2 வாரமாக மாடுகள் வரத்து குறைய ஆரம்பித்தது. தொடர்ந்து கார்த்திகை மாதம் துவங்கியதால், சபரிமலை சீசன் ஆரம்பித்தது.
இதனால், கேரள மாநில வியாபாரிகள் வருகையும் குறைந்து விற்பனை மந்தமானது. இந்நிலையில், இன்று நடந்த சந்தைக்கு, வெளி மாநிலங்களிலிருந்து மாடுகள் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. தமிழகத்தில் ‘டிட்வா புயல்’ காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன்காணமாக பொள்ளாச்சி சந்தைக்கு பிற மாவட்டங்களில் இருந்தும் 800க்கும் குறைவான மாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தது. இதற்கிடையே தற்போது கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் நோன்பு கடைபிடிப்பதால், வியாபாரிகள் வருகை மிகவும் குறைவாகி, மாடு விற்பனையும் மந்தமானது. இதில் இன்று காளை மாடு ரூ.32 ஆயிரம் வரையிலும், பசுமாடு ரூ.28 ஆயிரத்துக்கும், எருமை மாடு ரூ.35 ஆயிரத்துக்கும், கன்று குட்டிகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலும் என கடந்த மாதத்தைவிட, ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை குறைந்த விலைக்கு மாடுகள் விற்பனையானது. மாடு விற்பனை மந்தத்தால், இன்று ரூ.1 கோடிக்கு குறைவாக வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

