Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செக் மோசடி வழக்கில் சிக்கிய நடிகரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு: பாலிவுட்டில் பரபரப்பு

புதுடெல்லி: செக் மோசடி வழக்கில் பாலிவுட் நடிகர் ராஜ்பால் யாதவை சிறையில் அடைக்க டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலிவுட் நடிகர் ராஜ்பால் யாதவ் தனது முதல் படத்தை இயக்குவதற்காக ‘முரளி புராஜெக்ட்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்து பல கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அந்தத் திரைப்படம் தோல்வியடைந்த நிலையில், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்காக அவர் வழங்கிய சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான பல காசோலைகள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பின. இது தொடர்பாக தொடரப்பட்ட 7 வழக்குகளில், கடந்த 2018ம் ஆண்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்தத் தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றமும், கடந்த 2019ம் ஆண்டு அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது. இந்த விவகாரத்தில் ராஜ்பால் யாதவ் பிணையில் இருந்து வந்த நிலையில், தண்டனையை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா, ‘பணம் செலுத்துவதாக நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை நடிகர் மீண்டும் மீண்டும் மீறியுள்ளார், அவரது இந்த நடத்தை கண்டிக்கத்தக்கது’ என்று தெரிவித்தார். கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அவருக்குப் பலமுறை சலுகைகள் வழங்கப்பட்டும், அவர் அதனைப் பயன்படுத்தாமல் அற்ப காரணங்களைக் கூறித் தட்டிக்கழித்ததை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மும்பையில் தனக்கு படப்பிடிப்பு வேலைகள் இருப்பதாகக் கூறி அவர் கூடுதல் கால அவகாசம் கேட்டதை நிராகரித்த நீதிபதி, நாளை (இன்று) மாலை 4 மணிக்குள் சிறை கண்காணிப்பாளரிடம் அவர் சரணடைய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார். இதன் மூலம் அவருக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.