Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எங்களை நேரில் சந்திக்க தைரியம் கிடையாது; கொள்ளிக்கட்டையால் தலையில் சொரிந்து தனக்குத்தானே அழிவை தேடிக் கொண்ட எடப்பாடி: செங்கோட்டையன் நீக்கத்துக்கு டிடிவி பதிலடி

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தானில் அமமுக சார்பில், தொகுதி அளவிலான பூத் கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அளித்த பேட்டி: 1972ல் எம்ஜிஆர், அதிமுக ஆரம்பித்த நாளிலிருந்து எம்எல்ஏவாக செங்கோட்டையன் பணியாற்றியவர். செங்கோட்டையன் பசும்பொன்னில் எங்களை சந்தித்தது அரசியல்ரீதியான நிகழ்ச்சி இல்லை.

ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா பசும்பொன் வரும்போது எல்லாம், செங்கோட்டையன் ஜெயலலிதாவின் பாதுகாப்பிற்காக அங்கு வருவார். துரோகத்தை வீழ்த்துவதற்காக மூவரும் ஒன்றாக இணைந்திருக்கிறோம் என்றுதான் செங்கோட்டையன் சொன்னார். கங்காரு குட்டியை மடியில் கட்டிப்பிடித்து இருப்பது போல, எடப்பாடி பழனிசாமி பதவியை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார். குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல, தற்போது அதிமுகவை சின்னாபின்னம் ஆக்கி வருகிறார்.

கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிந்து கொண்டது போல, தகுதியற்ற எடப்பாடி, மூத்த தலைவர் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி தனக்குதானே அழிவை தேடி உள்ளார். எங்களை நேரில் சந்திக்கும் தைரியம் கூட எடப்பாடிக்கு கிடையாது.

ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜைக்கு எங்களுடன் வந்ததால், செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கிய துரோகத்தின் உருவம் பழனிசாமிக்கு தென் தமிழக மக்கள் நிச்சயம் தேர்தலில் பதில் அளிப்பார்கள். தென் தமிழ்நாட்டில் மிகப் பெரிய தோல்வியை எடப்பாடி பழனிசாமி சந்திப்பார். எங்களை பி.டீம் என்று சொல்லும் பழனிசாமி தான், 2021ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணமானவர்.2026 தேர்தலில் பழனிசாமியின் துரோகம் வீழ்த்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* தேர்தலில் எடப்பாடிக்கு சூரசம்ஹாரம் நடக்கும்

டிடிவி.தினகரன் கூறுகையில், ‘‘கொடநாடு கொலை வழக்கை பற்றி பேசினாலே பழனிசாமி பதறுவார். எதற்காக பதறுகிறார்? அரக்கர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது அழிவை சந்திப்பார்கள். கடைசியில் சூரசம்ஹாரம் நடக்கும். அது போல் இந்த தேர்தலில் எடப்பாடிக்கு சூரசம்ஹாரம் நடக்கும். எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்கு நாங்கள் ஜனநாயக முறையில் எடுக்கப் போகும் ஆயுதத்தை பொறுத்திருந்து பாருங்கள்’’ என்றார்.

* எடப்பாடியை ஏற்காமல் காய்கறி வண்டியில் தப்பி ஓடிய அதிமுக எம்எல்ஏக்கள்

டிடிவி.தினகரன் மேலும் கூறுகையில், ‘‘சீனியரான ஓபிஎஸ்க்கு அடுத்ததாக இருந்த எடப்பாடி பழனிசாமியை, முதல்வராக தேர்ந்தெடுத்துவிட்டு சசிகலா சிறைக்கு சென்று விட்டார். அவரை ஆட்சியில் அமரவைக்க யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை ஏற்றுக் ெகாள்ள வைத்தோம். சீனியரான செம்மலை போன்றவர்கள் வெளியே சென்று விட்டனர்.

பல எம்எல்ஏக்கள் காய்கறி வண்டியில் ஏறி தப்பிக்க பார்த்தனர். இதற்கு வேறு காரணம் இல்லை. பழனிசாமியை எப்படி முதல்வராக ஏற்க முடியும் என்றனர். அவர்களை எல்லாம் சமாதானம் செய்து, தடுத்து நிறுத்தி 122 பேர்களை ஒன்றிணைத்து வாக்களிக்க வைத்தேன். அவ்வாறு ஆட்சியை காப்பாற்றிய நான் துரோகியா? ஆட்சியில் அமர வைத்த சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி துரோகியா’’ என்றார்.

* ‘உதயகுமார் பெரிய மகான்’

எடப்பாடியை வீழ்த்துவதற்கு ஆயுதமாக நடிகர் விஜய்யை கையில் எடுப்பீர்களா என்ற கேள்விக்கு, ‘‘போர்க்களத்தில் தான் ஆயுதத்தை எடுக்க முடியும். அந்த ஆயுதத்தை 3 மாதம் பொறுத்திருந்து தேர்தலில் பாருங்கள். எங்கள் மூவரையும் பூஜ்யம் என ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார். அவர் பெரிய மகான்’’ என்றார்.

* துரோகத்தை பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை

‘மற்றவர்களை பார்த்து துரோகி என கூறும் தகுதி கூட எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கிய பழனிசாமி துரோகியா? அவர் முதல்வராக ஆதரவு வழங்கிய 18 சட்டமன்ற உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி துரோகியா? நாங்கள் துரோகியா? ஹிட்லர் போன்ற மனப்பான்மையில் உள்ளவர் தான் இந்த பழனிசாமி. துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அது பழனிசாமிக்கு தான் கொடுக்க வேண்டும்’ என்று டிடிவி.தினகரன் தெரிவித்து உள்ளார்.