தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு உலகளவில் பிரசித்தம். திருமணத்தையொட்டி வைக்கப்படும் விருந்து எப்போதும் தடல்புடலாகத்தான் இருக்கும். திருமணம் முடிந்து நடைபெறும் பந்தி பல்வேறு பதார்த்தங்கள் நிரம்பியதாக இருக்கும். பந்தியைப் பரிமாறுபவர்கள் சாப்பிடுபவரின் மனநிலையறிந்து பரிமாறுவர். உண்பவர்கள் பெரும்பாலும் உறவினர்களாக அமைந்திருப்பதனால் “மாமா உங்களுக்கு என்ன வேணும், தாத்தா இன்னும் கொஞ்சம் ரசம் ஊத்தட்டுமா?” எனக் கேட்டுக் கேட்டுப் பரிமாறுவர். இது அன்பு கலந்து பரிமாறப்படும் உயிரோட்டமான விருந்தாக அமையும். விருந்தில் வடை பாயசத்தோடு சோறு அளிப்பது வழக்கமாகப் பின்பற்றப்படுகிறது.
பரிசம்போட வருபவர்களுக்கு இரவு சோறு குழம்பு, ரசம், மோர், வடை, பாயசம் மற்றும் கூட்டு, பொரியல் ஆகியவற்றுடன் விருந்து அளிப்பது வழக்கம். ஒருசிலர் இட்லி, பொங்கல் போன்ற சிற்றுண்டி வகைகளையும் அளிக்கின்றனர். இவ்வாறு சிற்றுண்டி அளிப்பது அண்மைக்கால வழக்கமாக இருக்கிறது. வடை பாயசத்துடன் விருந்து என்றால் தலைவாழை இலையில் பரிமாறுவது உயர்வான விருந்தாகக் கருதப்படுகிறது. தலைவாழை இலையின் குறுகலான நுனிப்பகுதி உண்பவருக்கு இடப்பக்கமும் அகன்ற அடிப்பகுதி வலப்பக்கமும் அமையும்படி இலை விரிக்கப்பட வேண்டும். அதன் பிறகு இலையில் எந்த உணவு வகையை எங்கு வைக்க வேண்டுமென்ற முறையைப் பின்பற்றி வருகின்றனர்.
குறைந்த அளவு பரிமாறப்படும் உப்பு, ஊறுகாயை சிறிய இடப்பகுதியிலும், அதிக அளவு பரிமாறப்படும் பொரியல், கூட்டு, சோறு போன்றவை பெரிய அளவில் உள்ள வலப்பகுதியிலும் பரிமாறப்படும்.
திருமணம் முடிந்து மணமகள் வீட்டுக்கு புதுமணத் தம்பதி விருந்துக்குச் செல்வது வழக்கம். இவ்வாறு மூன்று முறை செல்வர். இதனை `மூன்று வழி’ என்று குறிப்பிடுவர். மூன்றுவழி போய் வந்தவுடன் கறிவிருந்து வைப்பர். இதனைக் `கவுச்சி கலப்பது’ எனக் குறிப்பிடுவர். மருமகனுக்கு எப்போதும் வாழை இலையிலேயே உணவளிப்பது ஒரு சிலரிடம் காணப்படும் வழக்கமாக இருக்கிறது.
தட்டு அனைவரும் உண்ணும்பாத்திரம் என்பதால் தனித்துவமாக பரிமாற வேண்டும் என நினைத்து வாழையிலையில் உணவு அளிக்கிறார்கள். மருமகனுக்கு சிறப்பான உணவு வகைகளைச் செய்து விருந்தளிப்பது மாமியார்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு செயலாகவும் இருக்கிறது. மருமகன் வருவதாக அறிந்து விருந்து ஏற்பாடாகி அவர் வராமல் போனால் மாமியார் வருந்துவதும் உண்டு. “மருமகனுக்கு செஞ்சத மகனுக்குப் போட்டு வயிறெரிஞ்சேன்” என்று ஒரு வழக்காறு இதனை உணர்த்துகிறது.கோழி அடித்து விருந்து வைப்பது என்கிற வழக்கமும் தமிழக மக்களிடம் காணப்படுகிறது. நாட்டுக்கோழி வகைகளை வளர்க்கும் வழக்கம் மக்களிடம் காணப்படுகிறது.
விருந்தினர் வருவது முன்கூட்டியே தெரியுமானால் கோழியைக் காலையில் கூட்டிலிருந்துத் திறந்துவிடும்போதே எந்தக் கோழியை அடிக்க வேண்டுமோ (கறி சமைக்க வேண்டுமோ) அதனைப் பிடித்துக் கூடையில் கவிழ்த்து வைத்திருப்பர். அல்லது மென்மையான சணலில் கட்டி வைத்திருப்பர். விருந்தினர் வந்ததும் அதனைக் கறிசமைத்து விருந்தளிப்பர். இவ்வாறு கோழி அடித்து விருந்து வைப்பது உயர்வான விருந்தாகக் கருதப்படுகிறது. வீட்டில் மணமணக்க அரைத்த மசாலாவைக் கொண்டு சுடச்சுடச் சாப்பிடும் நாட்டுக்கோழி விருந்து, விருந்தினர்களுக்கு திருப்தியான உணர்வை வழங்கும்.
ஊர் வழக்கம்திருமணம் முடிந்த பிறகு மணமகள் வீட்டிலிருந்து இனிப்பு, காரம் என அவரவர் வசதிக்கேற்ப பலகார வகைகளைச் செய்து மணமகன் வீட்டிற்குக் கொடுத்து அனுப்புவர். அப்படி வரும் பலகாரங்களை வகைக்கு ஒன்றாக வைத்து ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொடுத்தனுப்புவர். சிறிய ஊராக இருந்தால் ஊர் முழுக்கக் கொடுப்பர். பெரிய ஊராக இருந்தால் அவர்கள் குடியிருக்கும் தெருவில் உள்ள வீடுகளுக்குக் கொடுப்பர். இதனை `ஊர் வழக்கம் போடுதல்’ எனக் குறிப்பிடுவர். இதுபோலவே கருமாதிச் சடங்குக்காக வரும் பலகாரங்களையும் ஊர் வழக்கமிடுவர். யார் யார் வீடுகளிலிருந்து இவர்களுக்கு முன்பு பலகாரம் வந்ததோ அவர்களின் வீடுகளுக்கெல்லாம் மறவாமல் பலகாரத்தை அனுப்புவர்.
பிற விருந்து வகைகள்புதுமணத் தம்பதிகளை அவர்களின் உறவினர்கள் அழைத்து விருந்தளிக்கும் வழக்கம் ஒன்றும் இருக்கிறது. மணமகளின் தாய்மாமன் முறையுடையவர்கள் முதலில் அழைத்து விருந்தளிப்பர். குறிப்பிட்ட ஒரு வீட்டில் பெண் பூப்பெய்தினால் அதற்கான சடங்குகள் முடிந்த பிறகு அப்பெண்ணின் உறவினர்கள் பெண்ணின் வீட்டிற்கு வந்து விருந்து செய்வதும் வழக்கத்தில் இருக்கிறது.
கிராமங்களில் திரௌபதி அம்மன் கோயில்களில் தீமிதித் திருவிழா நடைபெறும். அதற்கு முன்பாக 18 நாள் பாரதக் கதையைப் பாடுவதற்கு பாரத பூசாரிகளை வெளியூரிலிருந்து அழைத்து வருவர். அவர்கள் 18 நாட்களும் அந்த ஊரிலேயே தங்கி இருப்பர். ஒவ்வொரு நாளும் திருவிழா உபயதாரர்கள் குடும்பத்தில் பாரத பூசாரிகளுக்கு விருந்தளிக்கப்படும்.
ஒருசில குடும்பங்களில் சகோதரர்கள் தனிக்குடித்தனம் இருப்பார்கள். அவர்கள் இருவருக்கும் பொதுவான விருந்தினர் வரும்போது இருவருமே உபசரிப்பர். காலை உணவு அண்ணன் வீட்டில் அளிக்கப்பட்டால் மதிய உணவு தம்பி வீட்டில் அளிக்கப்படும். ஒரு சில நேரங்களில் விருந்தினர் அண்ணன் வீட்டில் சாப்பிட்டிருப்பார் என்று தம்பி வீட்டில் நினைத்துக் கொண்டிருப்பர். தம்பி வீட்டில் சாப்பிட்டிருப்பார் என அண்ணன் வீட்டில் நினைத்துக் கொண்டிருப்பர். இப்படிப்பட்ட இடங்களில் விருந்தினர்பாடு திண்டாட்டம்தான். விருந்தோம்பலை உயர்வான பண்பாகக் கருதும் தமிழ்ச் சமூகத்தில் விருந்தோம்பலுக்கு எதிர்மறையான வழக்காறுகளும் காணப்படுகின்றன.
அவற்றையும் தெரிந்து கொள்வதன் மூலமே விருந்தோம்பல் பண்பின் முழுமைத் தன்மையை அறிய முடியும். விருந்தோம்பலும் எதிரான வழக்காறுகள் அதிகளவில் காணக்கிடைக்கின்றன. அவற்றுள் சில வகை வழக்காறுகள் இங்கு குறிப்பிடப்படுகின்றன. மருமகனுக்குச் சிறப்பாக விருந்தளிக்கும் மாமியார்கள் உண்டென்பதை அறிவோம். ஆனால் மருமகனுக்குச் சரியாக விருந்தளிக்காமல் பழைய சோற்றை அளிக்கும் மாமியாரும் உண்டென்பதைப் பின்வரும் வழக்காறு உணர்த்துகிறது. மாமியார் வீட்டுக்குச் செல்லும் மகனிடம் “உன்முகம் உனக்குத் தெரியும் முன்பே வந்துவிடு மகனே” என்று தாய் கூறியனுப்புகிறாள். அதாவது மாமியார் வீட்டில் இரண்டு, மூன்று நாட்களுக்குத்தான் நன்றாக விருந்தளிப்பார்கள்.
அதற்கு மேலும் நீ அங்கிருந்தால் உனக்குப் பழைய சோற்றை அளிப்பார்கள். அந்த நீராகாரத்தில் உன்முகம் தெரியும். அத்தகைய நிலை ஏற்படுவதற்கு முன்பே அங்கிருந்து வந்துவிடு என்று கூறுவதாக மேற்கண்ட வழக்காறு அமைந்திருக்கிறது.“முதல்நாள் வாழை இலை, இரண்டாம் நாள் தையல் இலை, மூன்றாம் நாள் கையிலே” என்று ஒரு வழக்காறு உண்டு. இது விருந்தினரை வெளியில் அனுப்புவதற்கான முயற்சி ஆகும். முதல் நாள் வாழை இலையில் விருந்தளிப்பர். இரண்டாம் நாள் தையல் இலையிலும், மூன்றாம் நாள் கையிலும் உணவளித்தால் எந்த விருந்தினர் தங்குவார்? ஜனரஞ்சக பத்திரிகைகளில் வெளி வரும் பல நகைச்சுவைத் துணுக்குகளில், வீட்டில் தங்கிவிட்ட விருந்தினரை வெளியில் அனுப்புவது எப்படி? என்பது போன்ற கருத்துக்கள் அமைந்திருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டி இருக்கிறது. இதுபோன்ற விருந்துக்கு எதிரான வழக்காறுகளை முழுமையாக ஆய்வு செய்தால் நமது விருந்தோம்பல் பண்பின் பன்முகத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.
- இரத்தின புகழேந்தி.



