லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சஹரன்பூர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.7.4 கோடி கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அசல் ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக ரூ.7.4 கோடி கள்ளநோட்டுகளை வைத்திருந்தது அம்பலமானது.
உத்தரபிரதேசத்தில் உள்ள சஹாரன்பூரில் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி, இந்த வங்கியிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) அனுப்பப்பட்ட பணத்தில் ரூ.4.36 லட்சம் பற்றாக்குறை இருப்பது தெரியவந்தது.
இது குறித்து வங்கியின் ஒருங்கிணைப்பு அதிகாரி அருண்குமார் சவ்பேக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இது குறித்து விசாரணை நடத்த சஹாரான்பூர் வங்கிக்கு குழு ஒன்றை அனுப்பினார். அவர்கள் வங்கி பணபாதுகாப்பு அறையில் இருந்த, சிசிடிவி பதிவை ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விரிவான வங்கியின் உள் தணிக்கையின் (Internal Audit) போது, வங்கியின் பிரதான பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக ரூ.7.40 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் மாற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
வங்கி தலைமையகத்துக்கு அனுப்பப்பட்ட பணத்தில் சில கட்டுக்களை பகுதி நேர துப்புரவு பணியாளர் விஷால் குமார் திருடியது தெரியவந்தது. இதையடுத்து வங்கி நிர்வாகம் பணபாதுகாப்பு அறையில் இருந்த பணத்தை சோதனையிட்டபோது அங்கு 7.40 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.
இது தொடர்பாக வங்கியின் மூத்த டிவிஷனல் மேலாளர் ரவிகுமார் காஸ், பணப்பாதுகாப்பு அறை மேலாளர்கள் சுஷில் சர்மா, அமித் குமார் ஆகியோர் மீது வங்கியின் சிறப்பு அதிகாரி புகார் அளித்தார். இதையடுத்து மூன்று அதிகாரிகள் மற்றும் துப்புரவு பணியாளர் விஷால் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். அதன்பேரில், தற்போது வரை 3 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பணம் திருட்டு தொடர்பாக விஷால் மீது போலீசார் தனியாக திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வங்கி தணிக்கை குழுவினர் பணத்தை தொடர்ந்து எண்ணும் பணியிலும் சரிபார்ப்பு பணியிலும் ஈடுபடுவதால் இந்த பணி நிறைவடைந்த பின்பே எவ்வளவு கள்ளநோட்டுகள் உள்ளன என்பது முழுமையாக தெரியவரும் என மூத்த எஸ்.பி அபிநந்தன் சிங் தெரிவித்துள்ளார்.



