Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இருமல் மருந்து விவகாரம் 700 உற்பத்தியாளர்களிடம் அரசு தீவிர தணிக்கை: நாடாளுமன்றத்தில் தகவல்

புதுடெல்லி: இருமல் மருந்து குடித்து குழந்தைகள் இறந்த விவகாரத்தை தொடர்ந்து நாடு முழுவதும் 700 உற்பத்தியாளர்களிடம் அரசு தீவிர தணிக்கை மேற்கொண்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உபியில் இருமல் மருந்து சாப்பிட்ட குழந்தைகள் பலியான விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக நேற்று மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுப்பிரியா படேல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: மாசுபட்ட இருமல் மருந்துகளை உட்கொண்டதாகக் கூறப்படும் குழந்தைகள் இறப்புகளைத் தொடர்ந்து, 700க்கும் மேற்பட்ட இருமல் மருந்து உற்பத்தியாளர்கள் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். ஒன்றிய மற்றும் மாநில மருந்து ஒழுங்குமுறை அதிகாரிகளால் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. மத்திய நிபுணர்கள் குழு மபி மாநிலம் சிந்த்வாரா மற்றும் நாக்பூருக்குச் சென்று விசாரணை நடத்தியது.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் உட்கொண்டதாகக் கூறப்படும் மொத்தம் 19 மருந்து மாதிரிகள், சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவர்கள் மற்றும் அருகிலுள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் இருந்து சோதனைக்காக சேகரிக்கப்பட்டது. இந்த 19 மாதிரிகளின் வேதியியல் பகுப்பாய்வில் 15 மாதிரிகள் நிலையான தரம் வாய்ந்தவை என்பதைக் காட்டியது, அதே நேரத்தில் 4 மாதிரிகள் நிலையான தரம் இல்லை என்று அறிவிக்கப்பட்டன. இந்த சோதனை அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரேசன் பார்மாசூட்டிகல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தில், கோல்ட்ரிப்பில் டைஎதிலீன் கிளைகோலின் இருந்தது.

இந்த மருந்தை உட்கொண்டதால் குழந்தைகள் இறப்புக்கு 46.28 சதவீதம் காரணம் என்பதுகண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் வளாகம் ஆய்வு செய்யப்பட்டது. அங்கு மீறல்கள் காணப்பட்டன. எனவே உற்பத்தியாளருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கை தொடர்பா தமிழ்நாடு அரசிடம் தெரிவித்து உற்பத்தி உரிமம் ரத்து செய்யப்பட்டது.

மேலும் மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, ஒடிசா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சப்ளை செய்யப்பட்ட அந்த நிறுவனத்தின் இருமல் மருந்துகளை உடனடியாகத் தடை விதிக்கவும் திரும்பப் பெறவும் உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து குழந்தைகளுக்கான இருமல் மருந்துகளின் பயன்பாட்டை உறுதி செய்ய அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத் துறைகள் மற்றும் சுகாதார வசதிகளுக்கு அக்டோபர் 3 ஆம் தேதி ஒரு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

* அதிக மாரடைப்பு மரணங்கள் ஏன்?

நாடு முழுவதும் அதிக மாரடைப்பு மரணங்கள் ஏன் என்பது குறித்து மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா,’ ஐசிஎம்ஆர் ஆய்வின்படி, கடுமையான மாரடைப்பு (ஏஎம்ஐ) உடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது, அறியப்பட்ட ஏதேனும் இணை நோய், த்ரோம்போடிக் நிகழ்வுகளின் குடும்ப வரலாறு மற்றும் புகைபிடித்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

மாரடைப்புக்கான காரணங்களைப் புரிந்துகொள்வதற்காக, ஐசிஎம்ஆர்-தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள 25 மருத்துவமனைகளில் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பொதுவான தொற்று இல்லாத நோய்களைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது விரிவான ஆரம்ப சுகாதாரத்தின் ஒரு பகுதியாக, நாட்டில் தேசிய சுகாதார இயக்கம் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது’ என்றார்.