வங்கிகள், ரயில்வே மீது அதிகம்; அரசு துறைகளுக்கு எதிராக 70,584 ஊழல் புகார்கள்: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தகவல்
புதுடெல்லி: கடந்த ஆண்டு அரசு அமைப்புகளுக்கு எதிராக 70,500க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்(சிவிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளிடம் 70,584 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 2025ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை 64905 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 5679 புகார்கள் 2025ம் ஆண்டின் இறுதியில் பரிசீலனையில் இருந்தன.
இதில் 2002 புகார்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் இருந்தன. வங்கிகளின் தலைமை ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் அதிகபட்சமாக 9933 புகார்கள் பெறப்பட்டன. அவற்றில் 9520 புகார்கள் தீர்க்கப்பட்டன. 413 புகார்கள் நிலுவையில் இருந்தன. ரயில்வே துறை தொடர்பாக 9381 புகார்கள் அதிகாரிகளிடம் பெறப்பட்டது. அவற்றில் 8754 புகார்கள் தீர்க்கப்பட்டன. 627 புகார்கள் நிலுவையில் இருந்தன. தலைமை ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணைகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.
புகார்களுக்கு விரைவாக தீர்வு காணப்படுவதை உறுதி செய்வதற்காக அதிகாரிகளிடம் நிலுவையில் உள்ள புகார்கள் குறித்து ஆணையம் அவ்வப்போது ஆய்வு நடத்துகின்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



