Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

குற்றம் கடிதல்

வடகர்நாடக பகுதியில் பலமான காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் வினய்குல்கர்னி. 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் ஒருமுறை அமைச்சராகவும் இருந்தார். பாஜ பிரமுகர் யோகேஷ்கவுடா கொலை வழக்கு தொடர்பாக கைதான வினய்குல்கர்னியை தார்வார் மாவட்டத்தில் கால் பதிக்ககூடாது என்று உச்சநீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்டதால், கடந்த 2023ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அவர் தார்வார் தொகுதியில் போட்டியிட்டபோது, ஒரு நாள் கூட தொகுதிக்கு சென்று தேர்தல் பரப்புரை செய்யாமல் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை நிரூபித்தார்.

பாஜ பிரமுகர் யோகேஷ்கவுடா கொலை வழக்கில் அவரை குற்றவாளியாக நீதிமன்றம் உறுதி செய்துள்ளதுடன், ஆயுள்தண்டனை வழங்கி இருப்பதால், அவரது அரசியல் எதிர்காலம் சூனியமாகி உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்- 1951 பிரிவு 8(3)-இன் படி, சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் குற்றத்திற்காகக் குறைந்தது 2 ஆண்டுகள் தண்டனை பெற்றால், அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி தகுதி நீக்கம் செய்யப்படும். தற்போது கொலை வழக்கில் வினய் குல்கர்னிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தின் தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன், சட்டமன்ற செயலாளர் வினய் குல்கர்னியின் தகுதி நீக்கத்திற்கான உத்தரவை பிறப்பிப்பார். தண்டனை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தகுதி நீக்க உத்தரவு அமலுக்கு வரும் என்று சட்டமன்ற செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டத்தின்படி, இந்த தகுதியிழப்பு தண்டனை காலம் முடியும் வரையிலும், தண்டனை காலம் முடிந்த பிறகு ஆறு ஆண்டுகள் வரையிலும் தொடரும். அதுவரை, வினய் குல்கர்னியால் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது.

வினய் குல்கர்னி இந்த தண்டனையை உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உயர் நீதிமன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ தண்டனைக்கு தடை விதித்தால், வினய் குல்கர்னியின் தகுதியிழப்பு நீக்கப்படும். அவரது எதிர்காலம் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் கையில் உள்ளது. இதற்கு முன் கர்நாடக மாநிலம், வடகனரா மாவட்டம், கார்வார் தொகுதி பேரவை உறுப்பினரான சதீஷ் சையில் மீதான கிரிமினல் வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விசாரணை நீதிமன்றம் வழங்கியது.

இதனால் அவரின் பேரவை உறுப்பினர் பதவி பறிபோனது. ஆனால் அவர் மீதான தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததால், மீண்டும் பதவி கிடைத்தது. அதேபோல் கங்காவதி தொகுதி பாஜ உறுப்பினர் ஜனார்தனரெட்டி மீதான குவாரி முறைகேடு வழக்கில் அவரை குற்றவாளியாக சிபிஐ நீதிமன்றம் அறிவித்து, 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதால் அவர் பதவி ரத்தாகியது. இந்த வழக்கின் தீர்ப்புக்கு ஐதராபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்தால், மீண்டும் உறுப்பினராக தொடருகிறார்.

அந்த வரிசையில் வினய்குல்கர்னி மீதான தண்டனைக்கு உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றம் தடை விதித்தால், பேரவை உறுப்பினராக தொடருவார். இல்லையெனில் அவரது அரசியல் அனுபவத்தில் ஒரு கரும்புள்ளி தான். தங்களின் பிரதிநிதியாக ஒருவரை மக்கள் தேர்வு செய்கிறார்கள் என்றால் அவர்கள் முறைகேடு, ஊழல்கள் போன்ற குற்றங்களை தவிர்த்து பொது சேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டுமே தவிர அரசியல் பகைக்கு பயன்படுத்தினால் இது போன்ற சட்டசிக்கல்களை சந்தித்தே தீர வேண்டும்.