மாநகராட்சி 8, 10வது மண்டலத்தில் பஸ் ஸ்டாப் தூய்மைப்படுத்தும் பணி: அதிகாரிகள் நேரடி ஆய்வு
அண்ணாநகர்: சென்னை மாநகராட்சி 8வது மண்டலம் அண்ணாநகர் மற்றும் 10வது மண்டலம் கோடம்பாக்கம் உட்பட பகுதியில் குப்பைகள், கட்டிட கழிவுகளை அகற்றுதல் மற்றும் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் அகற்றுதல், பேருந்து நிறுத்தம் மற்றும் இருக்கைகள் ஆகியவற்றை தண்ணீர் பயன்படுத்தி சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதன்படி, அண்ணாநகர் 8வது மண்டல அலுவலர் சுந்தரராஜன், கோடம்பாக்கம் 10வது மண்டல செயற் பொறியாளர் இனியன், தலைமை பொறியாளர் ராஜலட்சுமி, உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் பணிகளை பார்வையிட்டனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது;
அண்ணாநகர், கோடம்பாக்கம் 8 மற்றும் 10வது மண்டலத்துக்கு உட்ட பகுதிகளில் 2ம் கட்டமாக நிழற்கூடைகளில் உள்ள பழுதுகளை கணக்கெடுத்து மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பற்காக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளில் குறைகள் இருந்தால் சென்னைமாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
பயணிகள் கூறுகையில்,
‘’8 மற்றும் 10வது மண்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பேருந்து நிலையத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து வருகின்றனர். பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பேருந்து நிலையம் அழகாக காணப்படுவதால் மகிழ்ச்சியாக உள்ளது’ என்றனர்.