குன்னூர் - கோத்தகிரி மாற்றுப்பாதையில் ரூ.2 கோடியில் தார் சாலை சீரமைக்கும் பணி தீவிரம்
குன்னூர் : மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பாக குன்னூர் - கோத்தகிரி மாற்றுப்பாதையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் தார் சாலையை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பாக சாலைகள் சீரமைப்பு, சாலையோரங்களில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணிகள், தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் என பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குன்னூரில் இருந்து ஸ்டாப் காலேஜ், பாரத் நகர், பந்துமை வழியாக கோத்தகிரிக்கு செல்லும் சாலையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் தார் சாலைகளை சீரமைக்கும் பணிகளும், தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, இந்த சாலை பணிகள் நிறைவடைந்தால் கோடை காலங்களில் குன்னூர் நகரம் மற்றும் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் வகையில் கோத்தகிரி, மேட்டுப்பாளையம் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வர வசதியாக இருக்கும் என்பதால் சிறந்த முறையில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.