Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சர்ச்சைகள்

கர்நாடக மாநிலத்தில் புதிய முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்ற பிறகு சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. மேகதாது அணை கட்டுவதை ஒரு அஜெண்டாவாக கொண்டு செயல்படும் புதிய முதல்வர் ஒன்றிய அரசின் அனுமதியுடன் அணை கட்டியே தீருவோம் என்று பிடிவாதம் பிடிக்கிறார். மேகதாது அணையால் கர்நாடகாவை விட தமிழ்நாட்டுக்கு தான் அதிக பயன் என்றும் கூறுகிறார்.

மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு வலுத்துள்ளது. எனவே மேகதாது சர்ச்சை தொடரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பி.கே.ஹரிபிரசாத் அதிகாரப்பூர்வமாக பதவியேற்கும் விழா பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடந்தது.

இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்பட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டனர். எந்த சாலையில் பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இதே நாளில் தான் நீட் மறுதேர்வும் பல மையங்களில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மாணவர்கள் பொது போக்குவரத்திலும், தனி போக்குவரத்தை பயன்படுத்தியும் குறிப்பிட்ட தேர்வு மையங்களுக்கு விரைந்தனர்.

ஆனால் காங்கிரஸ் விழாவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஓரிரு மாணவர்கள் நீட் மறுதேர்வு மையத்துக்கு குறித்த நேரத்தில் சென்று சேரமுடியாத நிலை ஏற்பட்டது. இதை கெட்டியாக பிடித்துக்கொண்ட பாஜ தலைவர்கள் காங்கிரசுக்கு மாணவர்கள் நலனை விட தங்கள் பதவி, விழா, விளம்பரம் தான் முக்கியம் என்று கொதித்தனர். இதற்கு பதிலளித்த புதிய காங்கிரஸ் தலைவர் பி.கே.ஹரிபிரசாத், ‘காங்கிரஸ் விழாவால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

எங்கள் குழு அவர்களை சந்தித்து தேவையான உதவியை வழங்க தயாராக இருக்கிறது. ஆனால் மாணவர்கள் நலன் பற்றி பேச பாஜவுக்கோ, ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிரதமர் மோடிக்கோ தகுதியில்லை. ஒரு தேர்வை கூட ஒழுங்காக நடத்த தெரியாத ஒன்றிய அரசை கர்நாடக பாஜ எம்பிக்கள் கேள்வி கேட்க தைரியம் இருக்கிறதா?’ என்று விளாசிவிட்டார்.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் பதவியேற்பு விழாவில், மல்லிகார்ஜூன கார்கே உரையாற்றும் போது, அதில் பங்கேற்ற தொண்டர்கள் டி.கே.சி, டி.கே.சி என்று கோஷம் எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர். இதனால் மைக் முன்பு நின்றிருந்த கார்கேவுக்கு கடும் கோபம் வந்துவிட்டது. அவர்களை ஏக வசனத்தில் வறுத்தெடுத்துவிட்டார். நிலைமையை புரிந்து கொண்ட முதல்வர் டி.கே.சிவகுமார், ஆதரவாளர்களை அமைதிப்படுத்தினார். இதையடுத்து பேசிய மல்லிகார்ஜூன கார்கே, இது கட்சி விழா, இங்கு தனி மனித துதி பாடக்கூடாது.

அநாகரிகமாக நடந்து கொண்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார். இந்த சர்ச்சையோடு சேர்த்து கர்நாடக மேலவை தேர்தலில் காங்கிரசின் ஐந்தாவது வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு பாஜ, மஜத உறுப்பினர்கள் குறுக்கு வாக்கு செலுத்தியது இரு கட்சியிலும் பூதாகரமாக வெடித்துள்ளது. அதிலும் முதல்வர் டி.கே.சிவகுமார், பாஜ, மஜத உறுப்பினர்கள் அனைவரும் எனது சகோதரர்கள் என்று பொடிவைத்து பேசியது சர்ச்சையானது. இதனால் மஜத, பாஜ இருகட்சிகளும் உண்மை கண்டறியும் குழு அமைத்துள்ளது.