ஈரோடு : ஈரோடு கருவியல்பாறை வலசில் நடைபெற்று வரும் கால்வாய் கட்டுமான பணிகள், மழை நீர் தேங்கி நிற்பதால் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி 10வது வார்டுக்குட்பட்ட கருவியல்பாறை வலசில் உள்ள பார்க், குளம் ஆகியவை ரூ.8 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டு வரப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, கீழ்பவானி பாசன கசிவு நீர் வீணாவதை தடுக்கும் வகையில், பாசன கால்வாயின் இருபுறமும் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதாலும், மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதாலும், கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மழைக்காலம் துவங்குவதற்குள் கட்டுமான பணிகளை முடிக்க, மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.


