Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொடர் மழையால் ஊட்டி ரோஜா பூங்காவில் அழுகி உதிர்ந்த மலர்கள்

ஊட்டி : ஊட்டியில் பெய்து வரும் தொடர் கனமழையால் ரோஜா பூங்காவில் உள்ள ரோஜா மலர்கள் அழுகியும், உதிர்ந்தும் வருகின்றன. நீலகிரி மாவட்டம், ஊட்டி விஜயநகரம் பகுதியில் ரோஜா பூங்கா அமைந்துள்ளது. இங்கு 1500க்கும் மேற்பட்ட ரகங்களில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட ரோஜா செடிகள் உள்ளன. மேலும் இந்த ரோஜா பூங்காவில் பாரம்பரிய ரோஜாக்களுக்கு என தனியாக இடம் உள்ளது.

பாரம்பரிய ரோஜா பூங்காவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாரம்பரியமிக்க ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை ஊட்டி வரக் கூடிய சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்வார்கள். கோடை சீசனுக்காக கடந்த ஜனவரி மாத இறுதியில் ரோஜா செடிகள் கவாத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து உரமிட்டு பராமரித்தாலும், அவ்வப்போது பெய்த மழை காரணமாகவும் செடிகளில் வண்ண வண்ண ரோஜா மலர்கள் பூத்து குலுங்கின. கடந்த வாரம் 10,11 மற்றும் 12ம் தேதிகளில் ரோஜா கண்காட்சியும் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 15ம் தேதியில் இருந்து காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு ஊட்டி நகரில் கனமழை கொட்டுகிறது.

இதன் காரணமாக ரோஜா பூங்காவில் பூத்திருந்த வண்ண வண்ண மலர்கள் உதிர்ந்துள்ளன. மேலும் ரோஜா மொட்டுகள் தொடர் மழை காரணமாக அழுகி உள்ளன. இதனால் பாத்திகளில் உள்ள ரோஜா செடிகளில் மலர்கள் குறைந்து போய் காட்சியளிக்கிறது. மலர்கள் குறைந்துள்ளதால் பூங்காவிற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.