கட்டுமான நிறுவனர் மீதான குண்டர் சட்ட வழக்கில் திருப்பம்; ஐபிஎஸ் அருணுக்கு எதிராக ஐகோர்ட் கூறிய கண்டனங்கள் நீக்கம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடெல்லி: கட்டுமான நிறுவன அதிபரை குண்டர் சட்டத்தில் அடைத்த விவகாரத்தில் ஐ.பி.எஸ் அதிகாரி அருண் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை அடுத்து அவருக்கு எதிரான கண்டனங்களை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் சகோதரர் எல்.கே.சுதீஷ் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமான சென்னை கொளத்தூர் நிலத்தில், 234 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா ஒப்பந்தம் செய்தார்.
இதில் ஒப்பந்தப்படி ஒதுக்க வேண்டிய 78 வீடுகளில், 48 வீடுகளை போலி ஆவணங்கள் மூலம் விற்று சந்தோஷ் சர்மா சுமார் 42 கோடி ரூபாய் அளவுக்கு பெரும் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் வீடு வாங்க ரூ.1.38 கோடி செலுத்திய ரவி என்பவரும் அளித்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் சந்தோஷ் சர்மா மற்றும் அவரது மனைவியை கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி கைது செய்தனர். அப்போது சென்னை போலீஸ் கமிஷனராக பதவி வகித்த ஐ.பி.எஸ் அதிகாரி அருண், இந்த வழக்கை அடிப்படையாக வைத்து தொழிலதிபர் சந்தோஷ் சர்மாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சந்தோஷ் சர்மாவின் மகள் வர்ஷா சர்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிதி முறைகேடுகளுக்காக காலதாமதமாக குண்டர் சட்டத்தை ஏவியதை கடுமையாக சாடி அந்த உத்தரவை ரத்து செய்தது. மேலும் 28 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி அருண், இதுபோன்ற சட்டவிரோத தடுப்புக் காவல் உத்தரவுகளைத் தெரிந்தே தொடர்ந்து பிறப்பித்து வருவதாகக் கூறி அவருக்கு எதிராக மிகக் கடுமையான கண்டனங்களை நீதிபதிகள் பதிவு செய்தனர்.
உயர்நீதிமன்றத்தின் இந்த கடுமையான கண்டனங்களை நீக்கக் கோரி, ஐபிஎஸ் அதிகாரி அருண் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத், ஆர்.மகாதேவன் மற்றும் அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விரிவாக விசாரித்தபோது, ஐ.பி.எஸ் அதிகாரி அருண் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். அப்போது நீதிபதிகள், ‘உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் தங்களின் பொறுப்பை உணர்ந்து சட்ட விதிகளின்படி நடக்க வேண்டும். ஒருவரின் சுதந்திரத்தைப் பறித்துவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்பது தீர்வாகாது’ என்று எச்சரித்தனர்.
இருப்பினும் அதிகாரி அருண் கேட்ட நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அவருக்கு எதிரான சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனங்களை மட்டும் நீக்குவதாக உத்தரவிட்டனர். அதேவேளையில், கட்டுமான அதிபருக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தீர்ப்பளித்தனர்.


