Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தொகுதி நிலவரம் அறிய தனிப்படையை களம் இறக்கியிருக்கும் இலை தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘நடிகர் கட்சியின் விசில் சத்தம் யூனியன்வாசிகளை முகம் சுளிக்க வைச்சிட்டாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘விஜயமான நடிகரின் புதுக்கட்சி தனிரூட்டில் செல்லும் நிலையில், சிறிய கட்சிகள் கூட்டணி பேச்சு நடத்துகிறதாம்.. ஆனால் தமிழகத்தை ஒட்டிய சிறிய யூனியனிலோ அக்கட்சியின் நிலைப்பாடு தெரியாமல் நிர்வாகிகளும், மன்றத்தினரும் குழப்பத்தில் உள்ளார்களாம்.. தங்களின் நம்பிக்கையாக இருந்த புஸ்ஸியையும் உயர் பொறுப்புக்கு நடிகர் தூக்கிச்சென்ற நிலையில், மலராத கட்சியிலிருந்து ஓடிவந்த சாமியின் கருத்துகளை கேட்க யாரும் தயாராக இல்லையாம்.. இதனால் தனித்து விடப்பட்ட மரம்போல் தொகுதி நிர்வாகிகளின் தற்போதைய நிலை உள்ளதாம்.. விசில் கட்சியின் மூன்றாம் ஆண்டு விழாவை சில தொகுதிகளில் இளசுகளை திரட்டி ரோடு ரோடாக ‘‘விசில்” அடித்தபடி நிர்வாகிகள் இனிப்பு வழங்க யூனியன்வாசிகள் முகம் சுளித்தார்களாம்... அத்தோடு கட்சியினரிடம் விருப்ப மனு வாங்கும் விவகாரத்திலும் யூனியன் பெயர் மிஸ்சிங் என்ற புலம்பல் மன்றத்தினரிடம் எழுந்துள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஒவ்வொரு தொகுதியின் நிலவரத்தையும் தெரிஞ்சுக்க தனிப்படையை களம் இறக்கி இருக்காராமே இலைக்கட்சி தலைவர்..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி தலைவருக்கு வயதாகிட்டு வருதாம்.. எழுபது வயதை தாண்டி விட்டதால் இத்தேர்தல் தான் அவருக்கு கடைசி தேர்தலா நினைக்கிறாராம்.. குறிப்பாக தன்னந்தனியாக, எத்தனையோ இடையூறுகளை தாண்டி கட்சியை கைப்பற்றிய நிலையில், பெரியதாக பேக்ரவுண்ட் இல்லை என்பதால் இந்நினைப்பு வந்துருக்காம்.. இதனால சிறிது சிறியதாக குருவி போல சேர்த்து வைத்திருக்கும் துட்டை இத்தேர்தலுக்கு செலவு செஞ்சி எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதுதான் அவரோட கனவா இருக்குதாம்.. இதோ கூட்டணிக்கு வந்துட்டாங்க.. நாளைக்கு வரப்போறாங்கன்னு சொல்லிக்கிட்டே இருக்காராம்.. தற்போது சேர்ந்தவர்கள் எல்லாருமே அவருடன் இருந்த பழைய டிக்கெட்டுகள் தானாம்.. அதே நேரத்தில் தொகுதிக்குள் என்ன நடக்குதுன்னு தெரியாமல் தவிக்கிறாராம்.. இதற்காக தொகுதிக்கு ஒருவர் என்ற அளவில் அவரது தனிப்படைகளை களம் இறக்கியிருக்காராம் இலைக்கட்சி தலைவர்... ஒவ்வொரு தொகுதியின் நிலவரத்தை அவர்கள் மூலமாக தெரிஞ்சிக்கிறாராம்.. வாரத்திற்கு ஒரு நாள் அவர்கள் சென்னைக்கு போகணுமாம்.. இலைக்கட்சி தலைவரின் மகன் தான் இந்த டீமுக்கு தலைவராம்.. தந்தை, மகனிடம் தொகுதி நிலவரத்தை அந்த தனிப்படை டீம் விவரிக்கணுமாம்.. அவர்கள் கொடுத்துள்ள விவகாரத்தை மாவட்ட செயலாளரிடம் தெரிவிப்பதுடன், எந்த பகுதியில் இலைக்கட்சி வீக்காக இருக்குதுன்னு சொல்லி அதனை நிவர்த்தி செய்ய சொல்றாராம் இலைக்கட்சி தலைவர்.. இந்த தனிப்படை டீம் அமைக்கப்பட்டிருப்பது கட்சிக்காரங்களுக்கே தெரியாதாம்.. இவர்களுக்கு சம்பளம் என்று சொல்லக்கூடிய வகையில் கிடையாதாம்.. போக்குவரத்து செலவு மற்றும் சாப்பாடு செலவோடு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படுதாம்.. இவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலின்போது சரியான வாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருக்காராம் இலைக்கட்சி தலைவர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேர்தலுக்காக ‘பில்சாட்சி’ என அச்சிட்டு பிரசாரத்தில் ஈடுபட்ட இலைக்கட்சி நிர்வாகிகள் பாதியில் விட்டுட்டு ஓடிட்டாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கடலோர மாவட்டத்தில் இலை கட்சி சார்பில் உங்கள் ‘பில் சாட்சி’ என்ற தலைப்பில் நூதன பிரசாரத்தில் நிர்வாகிகள் ஈடுபட்டிருக்காங்க.. வீடு, வீடாக செல்லும் அவர்கள், தாங்கள் வைத்துள்ள விற்பனை முனைய கருவியில், ஒரு மாதத்திற்கு பயன்படுத்தும் மளிகை பொருட்களை கேட்டு தெரிந்து கொண்டு அதை பட்டியலிட்டு அதற்கான பில்லை பிரிண்டாக எடுத்து விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது என வீதி, வீதியாக பிரசாரம் செய்திருக்காங்க.. பிரசாரத்தின் போது பில் பிரிண்டை வாங்கிக் கொள்ளும் பொதுமக்கள், விலைவாசி உயர்வுக்கு காரணம் உங்களுடன் கூட்டணி வைத்து இருக்கும் மலராத கட்சி தானே என டோஸ் விட்டிருக்காங்க.. அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் பிரசாரத்தை பாதியிலே முடித்துக்கொண்டு எஸ்கேப் ஆகிருக்காங்க.. இந்த டாப்பிக் தான் மாவட்டம் முழுவதும் அடிபடுகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்டத்தின் தலைநகர் தொகுதியின் சமஉவாக இலைக்கட்சியைச் சேர்ந்த முருககடவுளின் பெயரைக் கொண்டவர் இருக்காரு.. இவர் ஏற்கனவே இத்தொகுதியில் போட்டியிட்ட மாஜி அமைச்சரான மீசைக்காரருக்கு குழி பறித்துவிட்டு தான் சீட்டை பறித்தார்.. தற்போது இவர் மீது தொகுதி மக்களிடம் மட்டுமின்றி கட்சியினரிடமும் கடும் அதிருப்தி நிலவுதாம்.. இவர் சமஉ ஆனதில் இருந்து அந்த பொறுப்பை நிறைவேற்றும் வகையில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எந்தவொரு மக்கள் நலத்திட்டத்தையும் செய்யவில்லையாம்.. நேரில் சந்திக்க சென்றாலும் பார்க்க முடிவதில்லை என்பதே மக்களின் குமுறலாக இருக்கு.. இவர் மட்டுமா?, ஏற்கனவே இருந்த மாஜி மீசையும், தொகுதிக்கு எதுவும் செய்யவில்லையாம்.. எனவே, இம்முறை ரெண்டு பேருக்கும் சீட் தரக்கூடாது. புதியவர்களை களம் இறக்குங்க.. தேர்தல் பணியாற்றுகிறோம் என மாவட்ட சீனியர் இலைக்கட்சியினர் தலைமையிடம் கறாராக கூறிட்டாங்களாம்.. இருப்பினும், மாஜி தரப்பில் வாரிசுக்கும், சிட்டிங் எம்எல்ஏ மீண்டும் போட்டியிட ஆர்வம் காட்டி சீட் கேட்டு வருகின்றனராம்.. புதுமுகமா, பழைய முகமா? யாருக்கு சீட் தருவது என்ற குழப்பத்தில் தவிக்கிறதாம் தலைமை..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.