Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தொகுதி மறுசீரமைப்பு, எண்ணிக்கை சார்ந்த பிரச்னை மட்டுமல்ல மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்கள் எண்ணிக்கை சார்ந்த பிரச்னை மட்டும் அல்ல; அது மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்னை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு பேச்சு: தொகுதி மறுசீரமைப்பு என்பது தான் இப்போது பேசும் பொருளாக உள்ளது. திமுக ஏன் இதனை பேசும் பொருளாக மாற்றியது என்றால் 2026-ல் தொகுதி வரையறை கண்டிப்பாக நடந்தே ஆக வேண்டும். அப்போது, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும்.

இதனை உணர்ந்து தான் முதலில் நாம் குரலை எழுப்பியுள்ளோம். இது எம்.பிக்கள் எண்ணிக்கை சார்ந்த பிரச்னை மட்டும் கிடையாது. மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்னை. அதனால் தான் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சியினரையும் அழைத்து கூட்டம் நடத்தினோம். அதில், பாஜவினர் தவிர அனைத்து கட்சிகளும் ஓர் அணியில் நின்று நியாயமான தொகுதி மறுசீரமைப்பு வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

அதில், இந்த தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படக்கூடிய மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து போராட வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதற்காக ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 7 மாநில முதல்வர்களுக்கும், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இருக்கக்கூடிய அந்த மாநிலங்களை சார்ந்த எல்லா கட்சிகளின் தலைமைக்கும் நான் கடிதம் எழுதியிருந்தேன். அந்த கடிதங்களை ஒரு அமைச்சர் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கொண்ட குழு அவர்களை சந்தித்து கொடுத்து விளக்கம் அளித்தனர். எல்லா மாநில முதல்வரிடமும் நான் தொலைபேசி வாயிலாக உரையாடினேன்.

இதனை தொடர்ந்து, சிலர் நேரடியாக வருவதாகவும், சிலர் ஏற்கனவே ஒத்துக் கொண்ட நிகழ்ச்சிகள் காரணமாக தங்களின் பிரதிநிதிகளை அனுப்புவதாகவும் கூறியுள்ளனர். அதன்படி, இந்த முதல்கட்ட ஆலோசனை கூட்டம் இன்று (22ம் தேதி) சென்னையில் நடைபெறவுள்ளது. இப்போது எதற்கு இந்த கூட்டத்தை நடத்த வேண்டும் என சிலர் கேட்கின்றனர். தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடும், நாம் அழைத்துள்ள மாநிலங்களும் பாதிக்கப்பட்டால் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது. ஜனநாயகத்திற்கான மதிப்பே இருக்காது. நாடாளுமன்றத்தில் நம்முடைய குரல்கள் நசுக்கப்படும். நமது உரிமைகளை நிலைநாட்டமுடியாது.

இது இந்த மாநிலங்களை அவமதிக்கும் செயலாகும். எனவே, மக்கள் தொகையை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தண்டனை கொடுக்கக்கூடாது. அதனால் தான் தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான கட்சிகளோடு ஒருங்கிணைந்த சிந்தனைப்படி மற்ற மாநிலங்களை ஒருங்கிணைக்கும் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்பட்டு, அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நமது நியாயமான கோரிக்கை நிச்சயம் வெற்றியடையும். நமது முன்னெடுப்பு இந்தியாவை காக்கும்.