Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொகுதிகளைப் பிடுங்க உள்துறை களத்தில் இறங்கப் போவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘யூனியனில் வாட்ஸ்அப் கவர்ச்சி மெசேஜால் தொழிலதிபர் ஒருவர் கோடியை பறிகொடுத்து விட்டாராமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘சுற்றுலாவுக்கு பெயர்போன யூனியனில் வெளிமாநில தொழிலாளர்கள் வருகை அதிகரித்தபடி உள்ளதாம்.. பெயர் சொல்லும் வகையில் புதிய ஆலைகள் வராவிட்டாலும், இருப்பதையே பல சிரமங்களை சந்தித்துதான் அதிபர்கள் ஓட்டுகிறார்களாம்.. நிலைமை இப்படியிருக்க வடமாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் அலைபேசிக்கு வாட்ஸ் அப்பில் ஒரு கவர்ச்சி மெசேஜ் வந்ததாம்.. ஆன்லைன் வர்த்தகத்தில் கோடிக்கணக்கில் அள்ளலாம் என தகவல் வர, உடனே ஓகே சொன்னாராம்.. முதலில் ஆயிரக்கணக்கில் லாபத்தை காட்ட, அடுத்ததாக கோடிக்கணக்கில் முதலீடு செய்தாராம்.. பின்னர் பிசினஸ் லிங்க்கை, நம்பரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட, சைபர் காக்கிகளிடம் ஓடினாராம்.. சிறிய மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கிற நீங்களுமா... இப்படி ஏமாந்தீங்க... என நகைக்க வாயடைத்தபடி நின்றவர், நைசாக நகர்ந்து விட்டாராம்.. இதுபற்றிதான் யூனியன் தொழில் அதிபர்கள் வட்டாரத்தில் பரவலாக பேச்சு..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வெயிலூர் தொகுதி விவகாரத்தில் மாஜி வீரமானவரும், இலைக்கட்சியினரும் உள்ளுக்குள் குமுறுகிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘வரும் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளின் கூட்டணிகள் இறுதிவடிவம் பெற்று வருகின்றன. அதற்கேற்ப வெயிலூர் தொகுதியில் இலை கட்சியின் சின்னத்தில் மூன்றெழுத்து இனிஷியல் கொண்டவர் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி இருக்கு.. வெயிலூரை அவருக்கு ஒதுக்குவதில் முன்னாள் வீரமான அமைச்சருக்கு கொஞ்சமும் விருப்பமில்லையாம்.. இதுகுறித்து தலைமையிடம் நேரடியாகவே தனது கருத்தை தெரிவித்துவிட்டாராம்.. ஆனாலும், இலைக்கட்சியின் தலைவரோ வெயிலூர் மூன்றெழுத்து இனிஷியல்காரருக்குத்தான்னு கறாராக சொல்லிவிட்டாராம்.. இதனால் வீரமான மாஜியானவர் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று விட்டாராம்.. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கட்சி சின்னத்தில் போட்டியிடும் அவர் கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். அதற்கு முன்னதாக 2019ல் நம்ம இலை சின்னத்தில் போட்டியிட்டு குறைந்த வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதற்கு மைனாரிட்டி மக்கள் ஓட்டுப்போடாததே காரணம்னு தெரிந்தும், இலைக்கட்சியினர் தான் தனக்கு பின்னால் பள்ளம் வெட்டி தோற்கடித்ததாக வெளிப்படையாகவே சொல்லியதுடன், பத்திரிகைகளிலும் பேட்டி கொடுத்தார். அப்படிப்பட்டவருக்கு நம்ம கட்சிக்காரர்கள் எப்படி வேலை செய்வார்கள்னு வீரமானவர் மட்டுமின்றி, இலை கட்சியின் தொண்டர்களும் உள்ளுக்குள் குமுறி வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எப்படியும் சீட் வாங்கி விடுவேன்னு மலராத கட்சிக்கு தாவிய மாஜி சேலஞ்ச் கொடுக்குறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளை எவ்வாறு பங்கிடுவது என்பதில் இலைக்கட்சிக்கும், தாமரைக்கட்சிக்கும் இடையே பெரும் அக்கப்போர் நடந்து வருதாம்.. கடந்த முறை நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் தாமரை கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 9 தொகுதியிலும் இலைக்கட்சியே போட்டியிட்டது. இம்முறை கூடுதலாக ஒரு தொகுதி என மொத்தம் 2 சீட் மட்டுமே ஒதுக்க இலைக்கட்சி முடிவுசெய்திருக்காம்.. ஆனால், தாமரை கட்சியில் பத்து பேர் வேட்பாளர் லிஸ்ட்டில் உள்ளனராம்.. இவர்களில், யாருக்கு சீட் என்பதில் பெரும் மல்லுக்கட்டு நடக்கிறதாம்.. ஏற்கனவே இலைக்கட்சியில் இருந்து மலராத கட்சிக்கு தாவியுள்ள மாஜி எம்எல்ஏ ஒருவர் இம்முறை நான் எப்படியாவது சீட் வாங்கி விடுவேன் என மேலிடத்தை தாஜா செய்து வருகிறாராம்.. கரன்சியை அள்ளி வீசுகிறாராம்.. இவர், கெமிக்கல் கம்பெனி நடத்தி வருகிறார். ஏற்கனவே, பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பதால், செலவுக்கு பிரச்னை இருக்காது என ஒரு தரப்பினர் கூறுகிறார்களாம்.. ஆனால், இன்னொரு தரப்பினர் கட்சி தாவி வந்த இவருக்கு சீட் கொடுத்தால், இத்தனை ஆண்டுகள் உழைத்த நாமெல்லாம் எங்கு போவது என எதிர்ப்பு குரல் கொடுக்கின்றனராம்.. ஆனாலும், மாஜி ரொம்பவே சேலஞ்ச் கொடுத்து வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சி கூட்டணியில் மூன்றில் ஒரு பங்கை எடுத்துக்கொண்டு உதிரிகளுக்கு ஒதுக்கப் போறாராமே உள்துறையானவர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஒன்றிய மலராதக் கட்சி திட்டம் தீட்டி வருதாம்.. தமிழ்நாட்டிற்குள் இந்தியை திணித்தே ஆக வேண்டும் என்பதற்காக கல்வி நிதியை வழங்காமல் நிறுத்தி வச்சிட்டாங்களாம்.. தமிழக அரசை பொறுத்தவரையில் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை தெரிந்தும், மாணவர்களுக்கான நிதியை கொடுக்க மறுத்துட்டாங்களாம்.. அவர்களின் மிரட்டலுக்கு பணிந்து போகாததால் இலைக்கட்சியை கைக்குள் வைத்துக்கொண்டு ஒவ்வொருவரையும் மிரட்டி பணிய வைக்க மலராத கட்சி அனைத்து வகையிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருதாம்.. இதற்கான பொறுப்பை ஒன்றிய உள்துறையானவர் ஏத்துக்கிட்டாராம்.. முதற்கட்டமாக இலைக்கட்சி தலைவர், குக்கர்காரர், பனையூர் மகன் ஆகியோர் மீதிருக்கும் ஊழல் வழக்குகளை காட்டி மிரட்டி அவர்களை அவரின் பக்கத்துக்கு கொண்டு வந்துட்டாராம்.. வீர வசனம் பேசிய அவர்களும் கைப்பாவையாக அடங்கிப்போய் இருக்காங்க.. இந்நிலையில் தமிழ்நாட்டில் இலைக்கட்சி தலைமையில் கூட்டணி என ஒரு மாயையை ஏற்படுத்திக்கொண்டு ஒன்றிய மலராத கட்சி உள்ளே வந்திருக்காங்களாம்.. மூன்றில் 2 பகுதி தொகுதிகள் இலைக்கட்சி தலைவருக்கு ஒதுக்கப்பட்டிருக்காம்.. அதன்படி 156 தொகுதிகளை கொடுத்துவிட்டு மீதமுள்ள 78 தொகுதிகளை மலராத கட்சி எடுத்துக்கொள்ளுமாம்.. இந்த தொகுதிகளை வைத்து பனையூர் பாமக, குக்கர்காரர், ஒன்றிய மலராத கட்சி மற்றும் உதிரிகளுக்கு ஒதுக்கப்போறாராம் உள்துறையானவர்.. குறிப்பாக குக்கர்காரர் திடீரென தேனிக்காரரையும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்காராம்.. அவரும் ஒன்றிணைவார் எனவும் இவர்களில் குக்கருக்கு 7 தொகுதியும், தேனிக்காரருக்கு 8 தொகுதியும் ஒதுக்கப்போறாங்களாம்.. தேனிக்காரரை குக்கர் சின்னத்தில் நிறுத்தப் போறதாகவும் சொல்றாங்க.. இதற்கிடையில் இன்னும் ஓரிரு நாட்களில் உள்துறையானவர் வந்து எல்லோரையும் அமர வச்சி அறிவுரை சொல்லப் போறாராம்.. அவர் கூறுவது அறிவுரையல்ல எனவும் சொல் பேச்சை கேட்க வேண்டும் என எச்சரிக்கப்போவதாக கூட்டணியில் சேர்ந்தவங்க சத்தமில்லாமல் சொல்றாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.