Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

50 ஆண்டுக்குப்பின் மேற்கொள்ளப்பட உள்ள தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வருமா? தரவுகள் சொல்லும் உண்மை என்ன? தென் மாநிலங்களுக்கு எவ்வளவு அதிகரிக்கும்: பெண்களுக்கான பிரதிநிதித்துவம் உயருமா?

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1951-52ம் ஆண்டு முதல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது இருந்த மொத்த இடங்கள் 401. அரசியலமைப்புச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950ன் படியும், 1951ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு உத்தரவுப்படியும், 1951ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தான் மக்களவை தொகுதிகள் முடிவு செய்யப்பட்டன. இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் 489 பேர். அந்நாளில் சில தொகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

சில தொகுதிகள் தனித்தொகுதிகளாக வரையறுக்கப்பட்டிருந்தன. பிற பிரிவினருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் தேர்வு ெசய்யப்பட்டனர். அந்நாளில் மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதி எல்லைகள் வரையறுக்கப்படவில்லை. இதுவே, ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டதற்குப் பிரதான காரணம். எம்பிக்கள் எண்ணிக்கை 500ஐ தாண்டக் கூடாது என முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதன் பிறகு, 1962, 1972, 1976, 2002-08 ஆகிய ஆண்டுகளில் தொகுதி மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. கடைசியாக மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு 2001 மக்கள் தொகை கணக்கை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதேநேரத்தில், 1976ம் ஆண்டில் இந்திரா காந்தி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த 42வது திருத்தச் சட்டத்தின்படி மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை 543 என நிர்ணயிக்கப்பட்டு, நிரந்தரமாக்கப்பட்டது.

கடைசியாக 2024ல் நடந்து முடிந்து 18வது மக்களவைத் தேர்தலிலும் இதுவே நீடித்தது. முதல் மக்களவைத் தேர்தல் நடந்தபோது இருந்த வாக்காளர் எண்ணிக்கை 17.3 கோடி. வாக்களித்தவர்கள் 10.5 கோடி; அதாவது, 45.7 சதவீதம் வாக்குப்பதிவு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை 97.98 கோடி; வாக்களித்தவர்கள் 64.64 கோடிப் பேர். வாக்குப்பதிவு சதவீதம் 66.10.

1976ம் ஆண்டிலிருந்து 50 ஆண்டுகளுக்கு தொகுதி மறு சீரமைப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. 2026ம் ஆண்டுடன் இது முடிவுக்கு வரும் நிலையில், நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு மசோதா - 2026 கடந்த ஏப்ரல் 16ம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், நாடு முழுவதும் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்காக ஒரு புதிய தொகுதி மறுவரையறை ஆணையத்தை (Delimitation Commission) அமைப்பதாகும்.

மசோதாவின் முக்கிய அம்சங்களாக,

* மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எல்லைகளை மறுசீரமைக்க தனியாக தொகுதி மறு வரையறை ஆணையம் அமைக்க வழிவகுக்கிறது. இதுபோல், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை இடங்களை மறு வரையறை செய்வதற்கான சட்ட அடித்தளம் உருவாக்கப்படுகிறது.

* தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்படும் நாளில் உள்ள சமீபத்திய மக்கள் தொகை தரவைப் பயன்படுத்த மசோதா முன்மொழிகிறது. இதன்படி, அடுத்த தொகுதி மறுவரையறைக்கு 2011ம் ஆண்டு மக்கள் தொகை பயன்படுத்தப்படும் நிலை உருவாகும்.

* இதுபோல், மக்களவை எண்ணிக்கையை அதிகரிக்கும் இணை அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்படும்.

* இத்துடன் கொண்டுவரப்பட்ட 131வது அரசியலமைப்பு திருத்த மசோதா - 2026, மக்களவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கையை 550-ல் இருந்து 850 ஆக உயர்த்த முன்மொழிந்துள்ளது. இதன்படி, மாநிலங்களுக்கு அதிகபட்சமாக 815 தொகுதிகளும், யூனியன் பிரதேசங்களுக்கு அதிகபட்சம் 35 தொகுதிகளும் கிடைக்கும்.

* மேற்கண்ட 850 தொகுதிகள் என்பது, மசோதாவில் முன்மொழியப்பட்ட அதிகபட்ச உச்சவரம்பு மட்டுமே.

* இந்த மறுவரையறையானது, மக்களவை மட்டுமின்றி, மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எல்லைகளையும் மறுசீரமைக்க ஆணையத்திற்கு அதிகாரம் வழங்குகிறது. மேலும், 2023-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பெண்கள் இடஒதுக்கீட்டு அரசியலமைப்புத் திருத்தத்தின் நடைமுறைக்கு தொகுதி மறுவரையறை முக்கியமான அடிப்படையாக உள்ளது.

* புதிய தொகுதி மறுசீரமைப்புக்குப்பிறகு, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்தும் நோக்கமும் இதில் அடங்கும்.

* புதிய மக்கள் தொகை மற்றும் தொகுதி அமைப்புக்கு ஏற்ப எஸ்சி, எஸ்டிக்கான ஒதுக்கீட்டுத் தொகுதிகளையும் மறுவரையறை செய்யப்படும்.

* 2002 சட்டத்திற்கு மாற்று: புதிய சட்டம் மூலம் ஏற்கெனவே இருந்த தொகுதி மறுசீரமைப்புச் சட்டம் 2002 ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்படும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த மசோதா மூலம் தற்போதைய பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்பது பிரதான கோரிக்கையாக இருக்கிறது. அதாவது, ஒட்டு மொத்த அளவில் நாடு முழுவதும் தொகுதிகளில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் போது, அதற்கேற்ப தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

தொகுதி மறுவரையறையால் விகிதாசாரம், பிரநிதிதித்துவம் குறைந்து விடக்கூடாது என்பதில் தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் தலைவரகள் பலரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மசோதாவின் இறுதி வடிவத்தை பார்த்த பிறகே ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்று முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஒட்டு மொத்த அளவில் தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது உள்ள 543 மக்களவை தொகுதிகள் எண்ணிக்கையை 815 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கேற்ப, தமிழ்நாட்டில் தற்போது உள்ள மக்களவை தொகுதி எண்ணிக்கை, ஏறக்குறைய 50 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 39 ஆக உள்ள மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை, 59 ஆக உயரும் என எதிர்பார்க்கலாம். தற்போது 543 இடங்களில் 39 தொகுதிகள், அதாவது 7.18 சதவீத தொகுதிகள் உள்ளன.

இது 7.23 சதவீதமாக உயருமேயன்றி குறைய வாய்ப்பே இல்லை என ஒன்றிய அரசும் உறுதி மொழி அளித்துள்ளது. அதாவது, மொத்த மக்களவை தொகுதிகள் 815 ஆக உயர்ந்தால் தமிழ்நாட்டுக்கு 59 கிடைக்கும். நாடாளுமன்றத்தில் இதுகுறித்த விவாதத்துக்குப் பதில் அளித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இதனை தெரிவித்துள்ளார். இதுபோல், கர்நாடகா மாநிலத்தில் தொகுதிகள் எண்ணிக்கை 28ல் இருந்து 42 ஆகவும், ஆந்திராவில் 25ல் இருந்து 38 ஆகவும், தெலங்கானாவில் 17ல் இருந்து 26 ஆகவும், கேரளத்தில் 20ல் இருந்து 30 ஆகவும் உயரும்.

இதன்மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட 5 தென் மாநிலங்களின் மொத்த மக்களவை தொகுதிகள் 129 ஆக இருக்கும். இது 815 இடங்களில் ஏறக்குறைய 24 சதவீதம். ஒட்டு மொத்த அளவில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மாறாது என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது. மேலும், ஒவ்வொரு எம்பி தொகுதியிலும் சராசரியாக மக்கள் தொகை 20 லட்சம் என உள்ளது. மறு சீரமைப்புக்குப் பிறகு இது 15 லட்சமாக குறையலாம். மொத்தத்தில் இந்த மறு சீரமைப்பு தமிழ்நாடு உட்பட தென்மாநிலங்களில் தற்போதைய விகிதாசாரம் மாறாமல் நியாயமானதாக, பிரதிநிதித்துவம் குறையாமல் இருக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

* தொகுதி மறுசீரமைப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மட்டுமின்றி, சட்டப்பேரவை தொகுதிகளும் அதிகரிக்கும். இதன்படி, 50 சதவீத உத்தேச உயர்வு அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை 39ல் இருந்து 59 ஆக உயரும்போது, தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தொகுதிகள் எண்ணிக்கை 234ல் இருந்து 351 ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதில் 33 சதவீத பெண்களுக்கான இடஒதுக்கீட்டை கணக்கில் கொண்டால் தமிழ்நாட்டுக்கு 116 பெண் எம்எல்ஏக்களும், 20 எம்பிக்களும் இருப்பார்கள். இது அரசியலின் பெண்களின் பங்களிப்பு உயர வாய்ப்பளிக்கும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

* 1977க்குப் பிறகு எண்ணிக்கை மாறாதது ஏன்?

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு 3வது முறையாக 1973ம் ஆண்டு நடந்தது. இதற்காக தொகுதி மறுசீரமைப்புச் சட்டம் 1972 இயற்றப்பட்டு, 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, 543 என இறுதி செய்யப்பட்டது. 42வது அரசியலமைப்புச் சட்ட திருத்தம் -1976ன்படி, 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் எண்ணிக்கை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், மக்கள் தொகை கட்டுப்பாட்டை பேணும் மாநிலங்களில் பிரதிநிதிகள் எண்ணிக்கை குறையாது எனவும் அதில் உறுதி செய்யப்பட்டது. இதனால் தான் தொகுதிகள் எண்ணிக்கை மாறவில்லை. தற்போது 2001ம் ஆண்டுக்குப் பிறகு, இந்த ஆண்டுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்கு முந்தைய தொகுதி மறுசீரமைப்புகள்

மக்களவைத் தொகுதிகளுக்கான முதல் மறு சீரமைப்பு 1952ல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது தொகுதிகளின் எண்ணிக்கை 489. பின்னர் 494 ஆக்கப்பட்டது. அடுத்ததாக 1963, 1973 மற்றும் 2002 ஆண்டுகளில் மறு சீரமைப்புகள் நடந்தன. இதன்படி மக்களவை தேர்தல் ஆண்டுகளில் இருந்த தொகுதிகள் எண்ணிக்கை வருமாறு:

1951-52 489

1957 494

1962 494

1967 520

1971 518

1977 543

(1976ல் எடுக்கப்பட்ட முடிவின்படி, தற்போது வரை 543 என்ற எண்ணிக்கை மாறவில்லை)