‘‘தேர்தல் தேதி அறிவித்ததும் சீட் கிடைக்காதவங்க உள்பட பல முக்கிய விஐபிக்கள் கட்சி மாறுவாங்கனு சொல்றாங்களே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘குட்டி பிரான்ஸ் என அழைக்கப்படும் புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வந்தாலே யார் எந்த கட்சிக்கு தாவுகிறார் என்பதுதான் பேச்சாக இருக்கும்.. 30 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் கிட்டத்திட்ட 30 ஆயிரம் வாக்காளர்கள் தான் இருப்பாங்க.. முதலில் தொகுதியில் உள்ள பிரபலம். அப்புறம் தான் கட்சியை பார்ப்பாங்க.. இதனால் கட்சி மாறுபவர்களுக்கு இது சர்வசாதாரணம். கடந்த ஐந்து ஆண்டாக தீபாவளி, பொங்கல் பண்டிகையில் பரிசுகள் வழங்கல் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் பிரபலம் ஒருவர் கலந்துகொண்டு வருவார் என்றாலே வரும் தேர்தலில் நிற்க போகிறார் என்பது தெரிந்துவிடும்.. அந்த பிரபலம், என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் உள்பட பிரதான கட்சிகளில் துண்டை போட்டு பேசி வருவார்.. அந்த வரிசையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாஜி துணை சபாநாயகர், சிட்டிங் எம்எல்ஏ உள்பட முக்கிய நிர்வாகிகள் காங்கிரஸ், திமுகவில் பேசி வருகின்றனராம்.. இவர்கள் பெரிய விழா எடுத்து கட்சி மாற உள்ளனராம்.. தேர்தல் தேதி அறிவித்தவுடன் சீட் கிடைக்காதவர்கள் உள்பட பல முக்கிய விஐபிக்கள் கட்சி மாறுவார்கள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேர்தல் நெருங்குவதால் மாஜி அமைச்சர் மீது திடீர் பாசம் காட்டும் மணியானவர் மீது நிர்வாகிகள் அதிருப்தி இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் திரு என தொடங்கும் ஊராட்சி ஒன்றியத்தில் இலை கட்சி சார்பில் மொழிப்போர் தியாகிகள் கூட்டம் இலை கட்சி மாஜி அமைச்சர் மணியானவர் தலைமையில் நடந்துச்சாம்.. தேர்தல் நெருங்கி வருவதால் தனது ஆதரவாளர்களுடன் மற்றொரு மாஜி அமைச்சரும் மேடையில் அமர வைக்கப்பட்டு இருந்தாராம்... இதை பார்த்து இலை கட்சியினரே கடும் அதிர்ச்சி அடைந்திருக்காங்க.. இதற்கு முன்பு இலை கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்துகொள்ள வரும் மாஜி அமைச்சரை கண்டு கொள்ளாத மணியானவர், திடீரென மாஜி அமைச்சர் மீது பாசம் எப்படி வந்தது. தேர்தல் நெருங்குவதால் அவரது தயவு தேவைப்படுது.. இதனால் பாசம் காட்டுவது போல் மணியானவர் நடிக்கிறார் என கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சி தொண்டர்கள் அரசல் புரசலாக பேசிக்கிட்டாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை கூட ஐந்து ஆண்டாக திறந்து பார்க்காத எம்எல்ஏவால் மக்கள் குமுறுகிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து யாவற்றையும் நிவர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறக்கப்பட்டிருக்கு.. கடைகோடி மாவட்டத்தில் உள்ள கோயில் நகர சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்கள் தங்களது கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினரிடம் மனுவாக அளித்து அவற்றை நிறைவேற்றிடும் வகையில் நகரின் மைய பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதாம்.. சட்டமன்ற அலுவலகம் அமைக்கப்பட்டது முதல் கடந்த முறை இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் உதவியாளர் மூலம் அலுவலகத்தை திறந்து வைத்து தினமும் பொதுமக்களிடம் தங்களது குறைகளை கேட்டு அறிந்து அவற்றை நிறைவேற்றி வந்தனராம்.. ஆனால் கடைகோடி மாவட்டத்தில் மலராத கட்சியில் இருந்து உறுப்பினர் தேர்வு செய்யப்பட்ட தேச தந்தையின் பெயர் கொண்டவர் 5 ஆண்டுகளாக இதுவரை இந்த சட்டமன்ற அலுவலகத்தை பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெறுவதற்காக திறந்ததே இல்லையாம்.. சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் கூட இங்கு தேசிய கொடியேற்றியதும் இல்லையாம்.. ஒரு கொடி கம்பம் இருந்த நிலையில் அதனையும் பிடுங்கி தள்ளிவிட்டனராம்.. அரசின் சார்பில் மின் கட்டணம் மட்டும் அலுவலகத்திற்கு முறையாக செலுத்தப்பட்டு வருகிறது. ஏன் இப்படி செய்கிறார்கள் என்று யாருக்கும் தெரிவது இல்லையென புலம்புறாங்க தொகுதிவாசிகள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘எம்எல்ஏ கனவு காணும் இலை பார்ட்டி தொகுதி மக்கள் மேல திடீர் அரவணைப்பு காட்டுகிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘குயின்பேட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட ஆறுகாடான தொகுதியில் ரெண்டு முறை தொடர்ந்து உதயசூரியன் வெற்றி பெற்று, தனது கோட்டையாக மாற்றியுள்ளது.. இந்த முறை இலை பார்ட்டியை சேர்ந்த 4 எழுத்து பெயர் கொண்ட டிஸ்ட்ரிக் செக்ரட்ரி, கூட்டணிக கட்சிக்காரங்க கிட்ட, இந்த முறை உங்களுக்கு குயின்பேட்டைய கேளுங்க நான் பார்த்துக்குறேன், ஆனால் ஒரு கண்டிஷன், ஆறுகாடு தொகுதிய மட்டும் கேட்காதீங்கன்னு சொல்லி வர்றாராம்.. அதோட, ஆறுகாடு ெதாகுதியில இருக்குற இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கி கொடுத்து திடீர் அரவணைப்பு காட்டி வர்றாராம்.. இந்த நிகழ்ச்சிகளையெல்லாம், சமூகவலைதளங்கள்ல வீடியோ வெளியிட்டு பில்டப்செய்து வர்றாராம்.. போன எலக்ஷன்ல குயின்பேட்டை மாவட்டத்துல போட்டியிட்டு படுதோல்வியடைஞ்ச நிலையில, ஆறுகாடு தொகுதி பக்கம் இவரு முழு கவனத்தையும் திருப்பி இருக்குறாராம்.. இவரோட எம்எல்ஏ கனவு நிசமாகுமா தெரியலையேன்னு பார்ட்டிக்குள்ளவே கைய விரிக்குறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.


