வெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு தாரை வார்க்க தயாராகியிருக்கும் இலைக்கட்சியை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
‘‘பேராசிரியைகள் பாலியல் புகார் தொடர்பான விவகாரத்தில் விரைவில் விசாரணை அறிக்கை கலெக்டர்கிட்ட கொடுக்கப்போறாங்களாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘மஞ்சள் மாவட்டத்துல உள்ள ஒரு அரசு கலைக்கல்லூரியில் பொறுப்பு முதல்வராக பணியாற்றக்கூடியவர் மீது சக பேராசிரியர்கள் பாலியல் புகார் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கு.. கல்லூரியில் வேலை செய்யக்கூடிய பேராசிரியைகளிடம் பாலியல் ரீதியாக பொறுப்பு முதல்வர் அத்துமீறலில் ஈடுபடுவதாக மஞ்சள் மாவட்ட கலெக்டர்க்கும், மகளிர் ஆணையத்திற்கும் கடிதம் ஒன்று அனுப்பி இருக்காங்களாம்.. பாலியல் அத்துமீறலில் பாதிக்கப்பட்டவர்கள் யார், புகாரை அனுப்பியது யார் என எந்த விவரமும் அந்த கடிதத்தில் இல்லையாம்.. ஆனாலும் இது சம்பந்தமாக விசாரிச்சு அறிக்கை அளிக்கும்படி மாவட்ட சமூக நலத்துறைக்கு கலெக்டர் உத்தரவு போட்டு இருக்கிறாராம்.. இது சம்பந்தமாக கல்லூரியில் வேலை செய்யக்கூடிய பேராசிரியர்களுக்கு சமூக நலத்துறையில் இருந்து முறைப்படி சம்மன் அனுப்பி விசாரணை நடந்துகிட்டு இருக்கிறதாம்.. ஒவ்வொரு பேராசிரியையையும் தனித்தனியாக அழைத்து விசாரணை நடந்திருக்கு.. முதல்கட்ட விசாரணையை முடித்திருக்கிறார்களாம்.. விசாரணை அறிக்கை விரைவில் கலெக்டரிடம் தாக்கல் செய்யப்படும்னு அதிகாரிங்க தரப்பில் சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சொல்வதெல்லாம் உண்மை என்பது போல சொல்வதெல்லாம் பொய் என முழு பூசணிக்காயை போட்டு இடதுசாரி தலைமை உடைச்சிட்டாங்களாமே எங்கே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குட்டி பிரான்ஸ் எனப்படும் புதுச்சேரியில் வெளிநாடு சுற்றுலாவாசிகள் ஆங்காங்கே இடம் வாங்கி போட்டு இருக்கிறார்களாம்.. குறிப்பாக பண முதலைகளும் நகர பகுதிகளில் அதிகளவில் வாங்கி போட்டிருந்தார்களாம்.. இதில் தட்டாஞ்சாவடியில் கடந்தமுறை புல்லட்சாமியை எதிர்த்து இடது சாரியில் நின்ற செல்வமானவர் 2ம் இடம் பிடித்தாராம்..
தொழிற்சங்கத்திலும் இவரது ஆதிக்கம் கோலோச்சிய நிலையில் திடீரென ஒரேநாளில் விலகல் முடிவை அறிவித்தாராம்.. மாஜி பிரதிநிதி உள்ளிட்ட சிலர் தன்னை தவறாக சித்தரித்ததுதான் காரணம் என செல்வமானவர் கூறியதால் தோழர்கள் அதிர்ந்து போனார்களாம்.. காற்று எதிர்திசைமாற இடதுசாரி உள்ளூர் தலைமையோ கட்டபஞ்சாயத்து செய்து பண முதலைகளிடம் பணம் பெற்றதால் ஒருவருடதுக்கு நீக்கிட்டோம், இது நாலு பேருக்கு தெரிஞ்சா கட்சிக்குதான் அசிங்கம் என்பதால் நாங்கதான் இதை மூடிமறைச்சுட்டோம்.. எந்த சூழ்ச்சியும் நடக்கல, செல்வமானவர் சொல்வதெல்லாம் நூறல்ல, இருநூறு சதவீதம் பொய் என முழுபூசணிக்காயை போட்டு உடைத்து விட்டாராம்.. இதுபற்றிதான் யூனியனில் பரவலாக பேச்சு ஓதுது.. என்றார் விக்கியானந்தா.
‘‘பல அணிகளாக பிரிந்து கிடப்பதால் தொகுதிகள் மீண்டும் கைகூடாது என்ற திடமான நம்பிக்கைக்கு வந்ததால் கூட்டணிக்கு தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்துவிட்டதாமே இலைக்கட்சி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புரம் என முடியும் கடலோரத்து மாவட்டத்தில் இலைக்கட்சியினர் மத்தியில் ஒரே புலம்பல்ஸ் தானாம்.. இந்த மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகள் கணிசமாக இருக்காம்.. இந்த 4 தொகுதிகளுமே இலைக்கட்சியின் கையில் இல்லை. 3 தொகுதியில் ஆளுங்கட்சியும், ஒரு தொகுதியில் கூட்டணி கட்சியும் இருக்கு.. இதனால், வரும் தேர்தலில் எப்படியாவது மாவட்டத்தில் ஒரு தொகுதியையாவது கைப்பற்றிவிட வேண்டுமென்ற நினைப்பில் இலைக்கட்சியினர் இருந்தாங்களாம்.. ஆனால், அவர்களது நினைப்பு பகல் கனவாகவே போய்விடுவோமா என கட்சியினரே அச்சத்தில் இருக்கிறார்களாம்.. மலராத கட்சியுடன் இலைக்கட்சி கூட்டணி என்பதால் இந்த மாவட்டத்து நான்கு தொகுதிகளிலும் போட்டியிட இலைக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தயக்கத்தில் உள்ளனராம்.. இதோடு இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இலைக்கட்சியினர் சின்ன மம்மி, குக்கர்காரர் மற்றும் பலாப்பழக்காரரின் ஆதரவாளர்கள் என பல அணிகளாக பிரிந்து கிடக்கின்றனராம்.. இதனால், மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளும் மீண்டும் தங்களுக்கு கைகூடாது என்ற திடமான நம்பிக்கைக்கு இலைக்கட்சியினர் வந்து விட்டனராம்.. பேசாமல் மாவட்டத்தின் மெஜாரிட்டி தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கி விடலாமா என யோசனையில் இலைக்கட்சி தலைமை இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கவர்மென்ட் இடத்துக்கு தனியார் சிலர் வாடகை வசூல் பண்ணுவதால் வருவாய் எல்லாம் மடைமாறுதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டத்துல தண்டத்துல தொடங்கி, பட்டுல முடியுற தொடக்க வேளாண் கூட்டு உறவு வங்கி இயங்கி வருது.. அதே கிராமத்தை சேர்ந்த ஒருத்தரு, இந்த வங்கியில தன்னோட நாலு ஏக்கர் நிலத்தை அடமானம் வெச்சி கடன் வாங்கினாராம்.. அந்த கடனை அடைக்க முடியலையாம்.. கடனை அடைக்க முடியாம போனதால, கூட்டு உறவு வங்கி அந்த நிலத்தை ஜப்தி செய்து வங்கிப் பெயர்ல பட்டா மாறிடுச்சாம்.. இப்ப அந்த இடத்துல, ஆக்கிரமிப்பு கடைகள் இயங்கி வருதாம்.. அதுக்கு வாடகை வசூல் நடக்குதாம்.. இந்த பணம் எல்லாம் தனிப்பட்ட சிலருக்கு வருவாயாக கொட்டுதாம்.. கவர்மென்ட் கஜானாவுக்கு போக வேண்டிய இந்த வருவாயெல்லாம் மடைமாறி போகுறதாக புகார்கள் எழுந்திருக்குது.. இதனால சம்பந்தப்பட்ட கூட்டு உறவு துறை, அந்த இடத்துல இருக்குற ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, புதுசா கழிவறை உள்ளிட்ட வசதிகளோட வணிக வளாகம் அமைச்சு கொடுக்கணும்.. அப்பத்தான் அரசுக்கு வருவாய் கிடைக்கும். சம்பந்தப்பட்ட துறை தான் நடவடிக்கைய எடுக்கணும்னு விஷயம் தெரிஞ்சவங்க பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

