‘‘விருப்பமே இல்லாமல் விருப்ப மனு தாக்கல் செய்றாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள்தான் இருக்கு.. இதனால் பல கட்சிகள் இப்போதே பணியை தொடங்கிட்டாங்க.. இலைக்கட்சி தலைமை அலுவலகத்தில கடந்த வாரம் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யும் பணிய தொடங்கினாங்களாம்.. ஆனா மாநிலம் முழுவதும் இருந்து இலைக்கட்சி நிர்வாகிகள் இதுல பெரிய அளவில் விருப்பம் காட்டவில்லையாம்..
இதனால அதிருப்தி அடைஞ்ச தலைமை உடனடியாக மாவட்ட ரீதியாக உள்ள கட்சி செயலாளர்களை தொடர்பு கொண்டு நிர்வாகிகளை அழைத்து வந்து பொதுச்செயலாளர் பெயரிலும், தொகுதி பெயரிலும் மனு தாக்கல் செய்யணும்னு வாய்மொழியாக உத்தரவு போட்டாங்களாம்.. இதை பயன்படுத்திக் கொண்ட மாவட்ட செயலாளர்கள், உள்ளூர் மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அணி நிர்வாகிகளை கட்டாயப்படுத்தி விருப்ப மனு தாக்கல் செய்ய வச்சாங்களாம்..
விருப்பமே இல்லாமல் விருப்ப மனுவா என நிர்வாகிங்க அதிருப்தி தெரிவிச்சாங்களாம்.. இதுக்கான காரணத்தை கேட்டால், இலைக்கட்சி ஏற்கனவே பல பிரிவுகளா பிரிஞ்சு இருக்கிறதால யாரும் கூட்டணிக்கு வர தயக்கம் கட்டுகிறார்களாம்.. விருப்ப மனு கொடுக்கவும் நிர்வாகிங்க வரவில்லை என்றால், சொந்த கட்சிக்காரங்களே தேர்தலில் போட்டியிட விருப்பம் காட்டவில்லைன்னு சொல்லுவாங்களாம்.. இதனால தான் விருப்ப மனு அதிகளவில் கொடுத்து இலைக்கட்சி இன்னும் வலிமையா இருக்கு..
தொண்டர்கள் பழைய மாதிரி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர் என மாஸ் காட்டணும்னு நினைச்சு தான் கட்சி தலைமை இதுபோன்ற பணியை மேற்கொண்டதாம்.. ஆனா கடன் வாங்கி வந்து விருப்ப மனு தாக்கல் செய்த பல நிர்வாகிங்க தங்களோட சொந்த தொகுதியில நிற்க மனு அளிக்கலையாம்.. பொதுச்செயலாளர் பெயரில் பணம் கட்டிட்டா போதும்னு தப்பிச்சு வந்தாங்களாம்..
கட்சி தலைமை அடிப்படை தொண்டனின் மனநிலையை கூட புரிந்து கொள்ளாமல் இப்படி செய்து வருவதாக புலம்பி வருகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வரும் சட்டப்பேரவை தேர்தலில் மாஜி அமைச்சர்கள் தொகுதி மாறி போட்டியிடும் முடிவில் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட டெல்டாவில் உள்ள இலை கட்சியை சேர்ந்த மாஜி அமைச்சர்கள் சிலர், கடந்த முறை போட்டியிட்ட தொகுதியில் இருந்து வேற தொகுதி மாற முடிவு செய்திருக்காங்களாம்...
இதற்காக வேறு தொகுதியை தேடுவதில் அந்த மாஜி அமைச்சர்கள் தற்போது தீவிரமாக இறங்கியிருக்காங்க.. மாறும் தொகுதிகள் குறித்து தனக்கு வேண்டிய டீம் மூலம் சர்வே எடுக்கும் பணியும் நடந்திருக்கு.. ஆனாலும், சர்வே முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக இல்லை என சர்வே எடுத்த டீம் மாஜி அமைச்சர்களிடம் தெரிவித்திருக்காங்களாம்..
இருந்தாலும், வேறு தொகுதியில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்க கூடாது என மனுநீதி சோழன் மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சரும் ஒரு முடிவில் இருப்பதாக அவரது நெருங்கிய ஆதரவாளர்களும் பேசிக்கிறாங்க. டெல்டாவில் உள்ள மாஜி அமைச்சர்கள் வேறு தொகுதியை விரும்பினாலும், அவர்களுக்கு தலைமை கொடுக் குமா? என்பது சந்தேகம் தான் என சொந்த கட்சிக்குள்ளே அரசல் புரசலாக பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘விருப்ப மனு நாட்களை நீட்டித்திருப்பது தொண்டர்களின் ரத்தத்தை உறிஞ்சும் இலைக்கட்சி தலைவரின் திட்டம் தானாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி முறுக்கு கம்பி போல வலிமையோடு இருக்க வேண்டுமானால், ஒற்றை தலைமை இருந்தால் தான் முடியும் என்ற கருத்தை கொண்டு வந்து, தேனிக்காரரை தந்திரமாக தூக்கினாராம் இலைத்தலைவர்.. இதனை அடிமட்ட தொண்டர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டதை காட்டும் வகையில், தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு 10 ஆயிரம் பேர் விருப்ப மனு கொடுத்திருக்காங்களாம்..
என்றாலும் மீண்டும் விருப்ப மனு கொடுப்போர் அதிகமாக இருப்பதால், மேலும் ஒரு வாரத்துக்கு அவகாசம் கொடுத்திருப்பதாக இலைக்கட்சி தலைவரின் அடிப்பொடிகள் சொல்றாங்க.. அதே நேரத்தில் தேர்தலில் யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்ற பட்டியலை எடுத்து வைத்துள்ள இலைக்கட்சி தலைவர், தொண்டர்களை ஏமாற்றும் வகையில் விருப்ப மனு நாட்களை நீட்டித்திருப்பதாகவும் கட்சிக்காரங்க குற்றம் சொல்றாங்க.. தேர்தலில் யார் போட்டியிட வேண்டும், அவர்களுக்கான தகுதி என்ன என்பது மறைந்த மம்மிக்கு தெரியும்...
கட்சியின் உறுப்பினராக இருக்கிறாரா, கட்சிக்காக சிறைக்கு சென்றிருக்கிறாரா என்பதுதான் அடிப்படை தகுதியா இருந்துச்சாம்.. இதற்கான உதாரணத்தையும் கட்சிக்காரங்க சொல்றாங்க.. இலைக்கட்சி தலைவர் ஊரிலேயே அதற்கான ஆதாரம் இருக்குதாம்.. மாநகர மாவட்ட செயலாளராக நியமிச்ச ஒருவர், ஏழ்மையாக இருந்தாராம்.. அவருக்கு சுமோ கார், டீசல், டிரைவருக்கு சம்பளம் என அனைத்தையும் கொடுத்து உயர்த்தி விட்டாராம்..
அதேபோல, புறநகரை சேர்ந்த மருந்து பெயரை கொண்ட ஒருவருக்கு போட்டியிட சீட் கொடுத்ததோடு, கையில் 5 லட்சத்தை கொடுத்து பத்து செட் துணி வாங்கி போட்டுக்கொள்ளுமாறு கொடுத்த தலைவர் தான் மம்மி எனவும் நெகிழ்ச்சியோடு சொல்றாங்க.. ஆனால் இலைக்கட்சி தலைவரோ, துட்டு யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு தான் சீட் கொடுப்பதாக சொல்றாங்க.. தற்போதும் சீட் யாருக்கு என்பதை முடிவு செஞ்சிருந்தாலும், கடமைக்காக விருப்ப மனு கொடுக்க நாட்களையும் நீட்டிச்சிருக்காராம்..
இது சீட் கேட்பதற்கு தொண்டர்கள் ரொம்பவே ஆர்வமாக இருப்பதாக காட்டி, ஊரை ஏமாற்றும் திட்டம் என்றும் இலைக்கட்சிக்காரங்க சொல்றாங்க.. கூட்டணி ஏதும் உருப்படியாக இல்லை, ஜெயிக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டு, பணம் கட்டச்சொல்வது தொண்டர்களின் ரத்தத்தை உறிஞ்சும் செயல் என ரத்தத்தின் ரத்தங்கள் கொதிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.



