Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

காங்கிரஸ் போராட்டத்திற்கு எதிர்வினையாக ராகுலின் உருவப் படத்தை வைத்து ‘புத்தி சுத்தி’ யாகம்: பாஜக செயலால் புதிய சர்ச்சை

டேராடூன்: உத்தரகாண்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உருவப்படத்தை வைத்து பாஜகவினர் ‘புத்தி சுத்தி’ யாகம் நடத்திய சம்பவம் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கார்கே சென்று திரும்பிய பிறகு அந்த இடம் புனித நீர் தெளித்து ‘சுத்திகரிப்பு’ செய்யப்பட்டதாக சர்ச்சை வெடித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘சுத்திகரிப்பு சடங்கு என்பது தீண்டாமையின் மற்றொரு வடிவம்’ என்று குற்றம்சாட்டியதுடன், இதற்கு காரணமானவர்கள் மீது எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் கருத்து தலித் மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, ஸ்ரீராம் சேனா தொண்டு அறக்கட்டளையைச் சேர்ந்த அமித் குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், ராகுல் காந்தி மீது எஸ்சி, எஸ்டி தடுப்புச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 196 ஆகியவற்றின் கீழ் கடந்த சில தினங்களுக்கு முன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் டெல்லி, கர்நாடகா, சண்டிகர் மற்றும் உத்தரகாண்டில் முழு வீச்சில் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இந்த சூழலில், டேராடூனில் உள்ள கடிகார கோபுரம் அருகே அமைந்துள்ள பஞ்சாயத்து கோயில் வளாகத்தில் பாஜகவினர் ஒன்று திரண்டு, ராகுல் காந்தியின் புகைப்படத்தை வைத்து ‘புத்தி சுத்தி’ யாகம் நடத்தினர். இதில் பாஜகவின் எஸ்.சி. பிரிவு மாநில தலைவர் மற்றும் இணை அமைச்சரான பல்வீர் குனியாலா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அப்போது பாஜக தலைவர்கள், ‘2027ம் ஆண்டு நடைபெற உள்ள உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, தவறான தகவல்களை பரப்பி மக்களிடையே சாதி ரீதியான பிளவை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சி செய்கிறார். அவருக்கு நற்புத்தி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த யாகம் நடத்தப்பட்டது’ என்று தெரிவித்தனர். இச்சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.