கோரக்பூர்: காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாட்டில் அராஜகச் சூழலை உருவாக்கி, ஜனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.
கோரக்பூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெற்ற ‘ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை அகற்றுவோம்’ நடைபயணப் பேரணியில் உரையாற்றிய முதல்வர் யோகி ஆதித்யநாத், \\”தேர்தலில் வெற்றி பெற்றால் அது தங்களது உழைப்பு என்றும், மக்கள் புறக்கணித்துத் தோற்கடித்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது பழி போடுவதையும் எதிர்க்கட்சிகள் வழக்கமாகக் கொண்டுள்ளன. அப்படியென்றால், அதே வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வெற்றி பெற்ற ராகுல் காந்தி எதற்காக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் மூலம் வங்கதேச ஊடுருவல்காரர்கள், பாகிஸ்தானியர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்கும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடுவதாகச் சாடினார். வெளிநாட்டு ஊடுருவல்காரர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதால், இந்திய ஏழைகள் மற்றும் தலித் மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.


