காங்கிரசும், கூட்டாளிகளும் சதி செய்கின்றனர்; ராகுல் காந்தி ஊடுருவல்காரர் தான்: தெலங்கானாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் தாக்கு
திருமலை: டெல்லியில் நடந்த காங்கிரஸ் பேரணி வாக்குகளை காப்பாற்றும் பேரணி அல்ல ஊடுருவல்காரர்களை காக்கும் முயற்சி. ராகுல் காந்தியும் ஊடுருவல்காரர் தான் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். ‘ஜனநாயகத்தை பாதுகாப்போம்- அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்’ என்ற பெயரில் தெலங்கானா பாஜக சார்பில் நேற்று ஏற்பாடு செய்திருந்த பாதயாத்திரையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று கட்சியின் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். தெலங்கானாவில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவர விரும்பினால் தன்னுடன் சேர்ந்து முழக்கங்களை எழுப்புமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டார்.
பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:
தெலங்கானாவில் உள்ள காங்கிரஸ் அரசை சுண்டு விரலால் தூக்கி விரட்ட வேண்டும். ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். இங்குள்ள அராஜக சக்திகள் ஒழிக்கப்பட வேண்டும். தெலங்கானாவில் பாஜக விரைவில் ஆட்சிக்கு வரும். டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் பேரணி வாக்குகளை காப்பாற்றும் பேரணி அல்ல மாறாக ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்கும் முயற்சி. ராகுல் காந்தியும் ஒரு ஊடுருவல்காரர் தான். காங்கிரஸ், ஊடுருவல்காரர்களை ஒரு வாக்கு வங்கியாகப் பார்க்கிறது. ஊடுருவல்காரர்களின் வாக்குகள் நீக்கப்பட வேண்டாமா? கள்ள வாக்குகளை நீக்குவதால் ராகுல் காந்தியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


