பெ ங்களூரு மாநகரம் சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி மற்றும் வேலைகளுக்கு புகழ்பெற்று விளங்குகிறது. இதனால் உலக நாடுகளில் உள்ள அனைவரும் பெங்களூருவை ேநாக்கி படையெடுத்து வருகின்றனர். பெங்களூரு மாநகரம் நான்கு புற எல்லைகளை நிர்ணயித்து கெம்பேகவுடா என்பவரால் உருவாக்கப்பட்டது. இதையடுத்து நகரத்தில் குளுமையான சீதோஷ்ண நிலையை வைத்து முதலீடுகள் அந்நகரில் குவிந்தது. தொழில்நுட்ப புரட்சி, டிஜிட்டல் யுகம் என்ற காலத்துக்கு தகுந்தாற்போல் அசுர வளர்ச்சி கண்டு தற்போது நிற்கிறது.
ஆனால் இந்த வளர்ச்சி அனைத்தும் கட்டிடங்கள், பிரமாண்ட மால்கள், பொழுதுபோக்குகள் என்று வளர்ந்துள்ளதே தவிர அடிப்படை வசதியான சாலை விரிவாக்கம், கழிவுநீர், மழைநீர் வடிகால் ஆகிய உட்கட்டமைப்பு பணிகளில் அடுத்தடுத்த அரசுகள் கோட்டை விட்டுவிட்டது. எப்போதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் பெங்களூருவில் வாகன ஓட்டிகள் சாலைகளை பயன்படுத்தவே அச்சப்படுகின்றனர். 10 நிமிடத்தில் சேர வேண்டிய தூரம் கூட அரை மணி முதல் ஒரு மணி நேரம் ஆவதால் மக்கள் அலுத்துக்கொள்கின்றனர்.
இந்நிலையில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான பதிவு செய்யப்பட்ட தனியார் கார்களைக் கொண்ட நகரமாக பெங்களூரு மாறியுள்ளது. கர்நாடக போக்குவரத்துத் துறையின் ‘வாகன்’ செயலி வாகனப் பதிவு தரவுகளின்படி, பெங்களூருவில் தனியார் கார்களின் எண்ணிக்கை முதன்முறையாக 25 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த ஜூன் மாதம் மட்டும் 13,519 புதிய கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, மாநகரில் சுமார் 3 லட்சம் மஞ்சள் பலகை டாக்சிகளும் இயக்கத்தில் உள்ளன. இவற்றையும் சேர்த்து மொத்த கார்களின் எண்ணிக்கை 25.2 லட்சமாக உயர்ந்துள்ளது.
கர்நாடக போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி பெங்களூருவில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 1.20 கோடியை கடந்துள்ளது. இதில் சுமார் 25 லட்சம் தனியார் கார்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், இந்தியாவின் பிற பெருநகரங்களை விட அதிக தனியார் கார்களை கொண்ட நகரமாக பெங்களூரு உருவெடுத்துள்ளது.
மாநகரின் ஒவ்வொரு கிலோமீட்டர் சாலைக்கும் சுமார் 900 வாகனங்கள் என்ற அளவில் வாகன அடர்த்தி இருப்பதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பு அதற்கேற்ப விரிவடையவில்லை. போக்குவரத்து நிபுணர்களின் கருத்துப்படி, சாலைகளை அகலப்படுத்துவது மட்டுமே நிரந்தரத் தீர்வாக அமையாது. மெட்ரோ ரயில் திட்டங்களை விரைந்து முடித்தல், புறநகர் ரயில் சேவைகளை மேம்படுத்துதல், பேருந்து சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் பொதுப் போக்குவரத்தை மேலும் நம்பகத்தன்மையுடன் மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளே தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்க உதவும்.
பெங்களூருவின் மக்கள் தொகையும் நகரின் பரப்பளவும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தனியார் கார்களின் எண்ணிக்கையும் இதே வேகத்தில் உயர்ந்தால், எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் மேலும் மோசமடையும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்துவதுடன், பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவது அவசியம் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் எப்படி இருந்த நகரம் இப்படி ஆகிவிட்டதே என்று மக்கள் புலம்புகின்றனர்.


