மே 10ம் தேதி தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே சர்ச்சைகளும், தடுமாற்றங்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மூன்றாவதாக பாட வைத்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பதவியேற்றதும் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 அல்லது தமிழகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் குறித்த கோப்புகளில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 200 யூனிட் மின்சாரம் இலவச திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார். இது அனைத்து நுகர்வோர்களுக்குமானது என எண்ணிக் கொண்டிருந்த நிலையில் 500 யூனிட்களுக்குள் பயன்படுத்துவோருக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவித்தது அனைவரும் ஷாக் தரும் செய்தியாக அமைந்தது. மேலும், முந்தைய அரசின் 100 யூனிட் இலவசம் என்பதும் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டது. இதனால் வழக்கத்தை விட மின் கட்டணம் அதிகரிக்கும் அபாய சூழல் ஏற்பட்டது. இதற்கு அனைத்து கட்சிகள், பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பலை கிளம்பியது. இதையடுத்து 100 யூனிட் மின்சாரம் இலவச திட்டமும் தொடரும் என அவசரம் அவசரமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
தேர்தல் பிரசாரத்தின்போது விஜய், திமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால், ஆட்சி பொறுப்பேற்க திமுக கூட்டணி கட்சிகளின் தயவு தேவைப்பட்டது. வெளிப்படையாக கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு தவெக தரப்பில் வேண்டுகோளும் விடுக்கப்பட்டது. காங்கிரஸ் தன்னிச்சையாக இணைந்தாலும், மற்ற கட்சிகள் முறைப்படி கூட்டணி கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து விட்டே இணைந்தனர். அமைச்சரவையில் சேரவும் விருப்பம் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் தரப்பில் அமைச்சரவை பதவி முக்கியமாக கருதப்பட்டது.
ஆனால், தவெக அரசு பதவியேற்பு விழாவில் அக்கட்சியை சேர்ந்த 9 அமைச்சர்கள் மட்டுமே பங்கேற்றனர். இவர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் அமைச்சர் கனவில் காத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு என்ன துறை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்பது பெரும் மர்மமாகவே உள்ளது.அரசு அமைக்க திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்ததால், மரியாதை நிமித்தமாக முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார்.
இவர்களோடு அதிமுக - பாஜ கூட்டணியில் இடம் பெற்ற பாமக தலைவர் அன்புமணியையும் சந்தித்தார். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை. மாறாக தங்களுக்கு நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டிய வேலுமணி தரப்பை சந்தித்தார். இது அதிமுகவில் மட்டுமல்ல... அரசியல்ரீதியாகவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வேலுமணி தரப்புக்கு அமைச்சர் பதவிகள் வழங்கவும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது ஒருபுறமிருக்க கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை வழங்க கால அவகாசம் தவெக அரசு தரப்பில் கோரப்பட்டது. பட்ஜெட்டில்தான் நிதி ஒதுக்கீடு என அறிவித்தது. ஆனால், கடும் எதிர்ப்பு எதிரொலியாக ரூ.1,000 மட்டும் வரவு வைக்கப்பட்டது. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி ஏன் ரூ.2,500 வழங்கவில்லையென பெண்கள் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். இப்படியாக தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு சர்ச்சைகள், தமிழக அரசியலில் சுழன்றபடியே உள்ளன. அரசு மாற்றம் ஏமாற்றமான அதிர்ச்சியில் மக்கள் உறைந்திருக்க, தவெக அரசின் தடுமாற்றம் எங்கே கொண்டு போய் விடுமோ என்ற அச்சமும் பரவலாக எழுந்துள்ளது.
