Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு: விஜய்யை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினர்

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் கட்சி, தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்டார். சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அவர் ஆட்சியமைக்க 118 எம்எல்ஏக்கள் தேவைப்படுகிறது. எனவே, அவர் பெரும்பான்மையை நிரூபிக்க எந்த கட்சி ஆதரவை நாடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் காங்கிரஸ் கட்சிக்கு நேரடியாக அழைப்பு விடுத்தார். திமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மேலும், நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, விஜய்க்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அப்போது விஜய், ‘தான் ஆட்சியமைக்க உதவுமாறு ராகுல்காந்தியை கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர், நிவேதித் ஆல்வா மற்றும் வெற்றி பெற்ற 5 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ராகுல்காந்தி முடிவெடுப்பார் என்று செல்வப்பெருந்தகை கூறினார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு டெல்லியில் கார்கே, ராகுல்காந்தி மற்றும் மூத்த தவைர்கள் தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து தமிழக காங்கிரஸ் தலைமைேய முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்தனர். இதனால் காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பது நேற்று முன்தினம் இரவே உறுதியானது. ஆனாலும் காங்கிரஸ் ஆதரவு தர வேண்டுமானால் ஒரு நிபந்தனை வைத்துள்ளது. மதச்சார்பற்ற கூட்டணியில் உள்ள கட்சிகள் மட்டும் தான் தவெக பக்கம் இருக்க வேண்டும், அதிமுக கூட்டணியில் உள்ள யாரையும் சேர்க்கக்கூடாது, என்பது தான் அது. மேலும், துணை முதல்வர் மற்றும் 2 அமைச்சர் பதவி கேட்டதாகவும் கூறப்பட்டது. மேலும், உள்ளாட்சி தேர்தலில் அதிக சீட்டுகளை ஒதுக்க வேண்டும் என்றும் தவெகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஒரு தகவல் வெளியானது. தவெக ஆதரவு நிலையை காங்கிரஸ் எடுத்ததை தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவது உறுதியானது.

இந்நிலையில், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று அறிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தவெக தலைவர் விஜய், தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவை கோரியுள்ளார். தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள் அடுத்த அரசாங்கத்தை அமைக்க தவெகவை தேர்ந்தெடுத்துள்ளனர். தமிழக மக்களின் இந்த முடிவை மதிப்பதும், நிலைநிறுத்துவதும், நிறைவேற்றுவதும் எங்களது கடமையாகும். அதன்படி, தமிழகத்தில் ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு முழு ஆதரவை வழங்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மற்றும் காங்கிரஸ் சட்டமன்றக் குழு முடிவு செய்துள்ளது.

இந்திய அரசியலமைப்பில் நம்பிக்கையற்ற எந்தவொரு வகுப்புவாத சக்திகளையும் இந்த கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் எங்களது ஆதரவு வழங்கப்படுகிறது. தவெக மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் இடையிலான இந்த கூட்டணி, தந்தை பெரியாரின் சமூக நீதி பாதையிலும், அம்பேத்கரின் அரசியலமைப்பு லட்சியங்களிலும் உறுதியுடன் செயல்பட்டு, பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டுவர பாடுபடும்.

இரு கட்சிகளுக்கும் இடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் அதிகாரப் பகிர்வு அடிப்படையில் அமைந்துள்ள இந்த கூட்டணி, இந்த ஆட்சி அமைப்பதோடு மட்டுமல்லாமல், வரும் உள்ளாட்சி தேர்தல், மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தல்களிலும் தொடரும். தமிழக மக்களின் கனவுகளையும், வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதாகவும் விஜய் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து உறுதி பூண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தவெக கூட்டணியில் இணைவதாக முறைப்படி காங்கிரஸ் தலைமை அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் விஜய்யை பனையூரில் உள்ள அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்கான கடிதத்தை வழங்கினர்.