Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கட்டுப்பாட்டால் கவலை

அமெரிக்க- ஈரான் போரால் எரிபொருள் சக்தி கிடைப்பதில் ஏற்பட்ட நெருக்கடி இந்தியாவிலும் பல்வேறு மாற்றங்களை சமீபகாலமாக உருவாக்கி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. இந்நிலையில் டீசல் வாங்குவதற்கு ஒன்றிய அரசு விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் மருத்துவமனைகளையும், தொழிற்சாலைகளையும் பாதிப்பதாக உள்ளது. பொதுவாக பெட்ரோல் மற்றும் டீசலை மொத்தமாக வாங்கும் தொழிற்சாலைகளுக்கு சந்தை விலையும், சில்லறை விற்பனை நிலையங்களில் பொதுமக்களின் வாகனங்களுக்கு இயல்பான விலையும் நிர்ணயிக்கப்படுவது வழக்கம்.

தற்போது டீசல் சில்லரை விலையில் லிட்டருக்கு 95.20 ரூபாய்க்கும், மொத்த விலையில் 134.50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. விலை வித்தியாசம் மிகப்பெரிய அளவில் இருந்ததால், எண்ணெய் நிறுவனங்கள் டீசல் தேவையை ஈடுகட்ட பெட்ரோல் நிலையங்களை நாடிச் சென்றன. இதனால் பெட்ரோல் பங்க்குகளில் விற்பனை திடீரென அதிகரித்தது. இதற்கு கடிவாளம் போடும் வகையில் ஒன்றிய அரசு ஒரு வாடிக்கையாளர் அல்லது வாகனத்திற்கு நாள் ஒன்றுக்கு 200 லிட்டர் டீசல் மட்டுமே வழங்கிட உத்தரவிட்டுள்ளது. தொழில்துறை மற்றும் வணிக வாடிக்கையாளர்கள் சில்லறை விற்பனை நிலையங்களை நாடி செல்வதை தடுத்திடும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பதுக்கல் உள்ளிட்ட முறைகேடுகளையும் தவிர்க்க முடியும். இந்நிலையில் இந்த உத்தரவு காரணமாக மருத்துவமனைகள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பல்வேறு சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் பல மருத்துவமனைகள் அவசர கால மின்தேவைக்கு டீசல் இன்ஜின்களையே நம்பியுள்ளன. மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு தடையற்ற மின்சாரம் எப்போதும் தேவையாக உள்ளது. அதிலும் தமிழகம் போன்ற மாநிலங்களில் அடிக்கடி இப்போது மின்தடை ஏற்பட்டு வரும் நிலையில், டீசல் தேவை அதிகரித்து வருகிறது. இச்சூழலில் சில்லறை நிலையங்களில் 200 லிட்டருக்கு மேல் வழங்க கூடாது என உத்தரவிட்டிருப்பது பாதிப்புகளை அதிகரிக்கும்.

மருத்துவமனைகளை பொறுத்தவரை மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால் கூட நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். நோயாளிகளின் நலன் கருதி மருத்துவமனைகளுக்கு இதில் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாகும். தொலை தொடர்புதுறையின் சேவைகளுக்கும், ஐடி நிறுவனங்களுக்கும் கூட இன்றைய சூழலில், டீசலின் தேவை அதிகம் உள்ளது. டீசல் தட்டுப்பாடு அதிகரித்தால் தொலை தொடர்பு துறையில் அவசர கால தொடர்புகள் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

இதுதவிர லாரிகளும் கூட எரிபொருள் நிரப்புவதில் சிக்கல்களை எதிர்கொள்வதால், சரக்குகள் முறையாக வந்து சேருவதில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. சரக்கு போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பெரிய லாரிகளின் எரிபொருள் டேங்குகள் பொதுவாக 200 முதல் 400 லிட்டர் வரை டீசல் நிரப்பும் வகையில் இருக்கும். மாநிலங்கள் தாண்டி செல்லும் இத்தகைய லாரிகள் ஒவ்வொரு இடமாக டீசலை நிரப்புவது இயலாத காரியமாகும். தினமும் அதிகளவில் டீசலை பயன்படுத்தும் கல்வி நிறுவனங்கள், பெரும் நிறுவனங்களும் தற்போது டீசல் பிரச்னையை எதிர்கொள்ள தொடங்கியுள்ளன. எனவே ஒன்றிய அரசு டீசல் கட்டுப்பாடு என்கிற விதிமுறைகளில், அத்தியாவசிய சேவைகளான மருத்துவமனைகள் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும், சரக்கு போக்குவரத்திற்கும் விலக்கு அளிக்க வேண்டும்.