ஆள்மாறாட்டம், மோசடிகளை தடுக்கும் வகையில் கம்ப்யூட்டர் வழியில் ‘நீட்’ தேர்வு நடத்த பரிசீலனை: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல்
புதுடெல்லி: நீட் தேர்வை கணினி வழியில் நடத்துவது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற நீட்-யுஜி தேர்வு முறைகேடு சர்ச்சைகளைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) தேர்வு முறைகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த மே 29ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை இணைச் செயலாளர் அரவிந்த் குமார் சின்ஹா தாக்கல் செய்த மனுவில், பேனா மற்றும் காகிதம் (OMR தாள்) பயன்படுத்தி தேர்வு எழுதும் பாரம்பரிய முறைக்கு மாற்றாக, நீட் தேர்வை கணினி வழியில் (சிபிடி) மாற்றுவது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வு முறைகளை முழுமையாக மறுஆய்வு செய்ய இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில் கடந்த ஜூன் 27ம் தேதி உயர் மட்ட பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ்.சோமநாத், ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் வி.காமகோடி உள்ளிட்ட பலர் இடம்பெற்று உள்ளனர். மேலும் வினாத்தாள் கசிவு மற்றும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில், பொதுத்தேர்வு முறைகேடு தடுப்பு திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான நிபுணர் குழுவின் வழிகாட்டுதலின்படி, வினாத்தாள் தயாரிப்பு முதல் தேர்வு முடிவுகள் வெளியீடு வரை பல அடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. பாட நிபுணர்களால் தயாரிக்கப்படும் வினாக்கள் 5 மடங்கு அதிகமாகச் சேகரிக்கப்பட்டு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன. அச்சிடப்பட்ட வினாத்தாள்கள் ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் பாஸ்வேர்டு இல்லாத ஒருமுறை மட்டுமே உடைக்கக்கூடிய சிறப்பு பூட்டுகள் கொண்ட இரும்பு பெட்டிகளில் அடைக்கப்பட்டு, பாதுகாப்பு படையினரின் தீவிர பாதுகாப்போடு வங்கிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
தேர்வு மையங்களில் கைரேகை, முக அங்கீகாரம் மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்பிற்கு பிறகே தேர்வர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்றும், எதிர்காலத்தில் ஜேஇஇ தேர்வு போல இரு கட்டங்களாக நீட் தேர்வை நடத்துவது குறித்து ஆலோசனைக்குப் பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் ஒன்றிய அரசு சார்பாக வழக்கறிஞர் மதுலிகா உபாத்யாயா தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
