நகைக்கடனில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்கும் வகையில், ரிசர்வ் வங்கி சமீபத்தில் புதிய விதிகளை அறிவித்தது. நகையின் மதிப்பில் 75சதவீதம் மட்டுமே வங்கி கடனாக வழங்க வேண்டும். 22 காரட் நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்க வேண்டும். அடகு வைக்கும் அனைத்து நகைகளுக்கும் கட்டாயம் ரசீது வேண்டும் என்று 9 விதிகள் மிகவும் கடுமையாக இருந்தது. இந்த புதிய விதிமுறைகள் குறிப்பாக ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு பேரிடியாக இருந்தது.
தங்கம் என்பது அவசர தேவைக்கு உதவும் அடகு பொருளாகவே கருதப்படுகிறது.
இந்தச்சூழலில் புதிய விதிமுறைகள், மக்களை அபாய வழிக்கு திருப்பிவிடும். உதாரணமாக நிபந்தனைகள் இல்லாத கடன்பெறுவதற்கு ஆன்லைன் செயலிகளையும், கந்துவட்டிகாரர்களையும் நாடுவது அதிகமாகும். இதைகருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நகை கடன்களுக்கான புதிய விதிமுறைகளை திரும்ப பெற வேண்டும் என்று, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஒன்றிய நிதி அமைச்சகம், புதிய விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, இரண்டு லட்சத்துக்கும் குறைவான நகை கடன் பெறுபவர்களுக்கு, புதிய விதிகளிலிருந்து தளர்வு அளிக்க வேண்டும். புதிய விதிமுறைகளை 1.1.2026க்கு பிறகு நடைமுறைப்படுத்த வேண்டும் என பரிந்துரைத்தது. இதனை ஏற்ற ரிசர்வ் வங்கி, இரண்டு லட்சத்திற்கும் குறைவான நகை கடன் வாங்குவதற்கு, புதிய விதிகள் பொருந்தாது என கூறியுள்ளது. இருந்த போதும் இந்த விதிமுறை தளர்வால் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படாது என்கின்றனர் பொருளாதார மேம்பாட்டு நிபுணர்கள்.
அதாவது 2 லட்சம் ரூபாய்க்கு குறைவாக நகை கடன் பெறுபவர்களுக்கு மட்டுமே விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. அதற்கு மேல் நகை கடன் பெற்றால், புதிய விதிகள் தான் பொருந்தும். உதாரணமாக அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு நகை கடன் பெற வேண்டும் என்றால், 2லட்சம் ரூபாய்க்குரிய விதிகளில் தான் பெற முடியும். ஒரு அறுவை சிகிச்சைக்கு ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்றால், 3அல்லது 3 முறைக்கு மேல் அடகு வைத்து தான், பணம் பெற முடியும். இதனால் தேவையில்லாத காலவிரயம் ஏற்படும்.
மேலும், தற்போது புதிய கல்வி ஆண்டு தொடங்கி இருக்கும் நிலையில், கல்லூரி கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவற்றை செலுத்த, தங்கத்தை பணமாக மாற்ற வேண்டிய நிலை பல பெற்றோருக்கு இருக்கிறது. இதனால் அவர்களுக்கு பெரிய அளவில் சிரமம் ஏற்படும். எனவே, இந்த விதிமுறைகள் அனைத்தையும் முழுவதுமாக நீக்க வேண்டும். அப்போது தான், அவசர தேவைகளுக்கு மக்கள் பணத்திற்காக அலைய வேண்டிய நிலை இருக்காது. மேலும், நகையின் தரம் மற்றும் 22 காரட் நகையாக மாற்றுவதற்கும் கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்பதால் நடப்பாண்டு (2025) முழுவதும் இந்த விதிமுறைகளை அமல்படுத்தக்கூடாது என்கின்றனர் சமூக மேம்பாடு சார்ந்த பொருளாதார நிபுணர்கள்.


