Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் மதவாத அரசியல் தலையெடுக்காமல் தடுக்கும் அரணாக இறுதி வரை உறுதியாக நிற்பேன்: முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதி

சென்னை: தமிழ்நாட்டிற்குள் மதவாத அரசியல் தலையெடுக்காமல் தடுக்க நான் இறுதி வரை உறுதியாக நிற்பேன் என தொண்டர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு நம் பாதையில் தடைக்கற்களை அள்ளி அள்ளிப் போட்டாலும், அதனை எதிர்கொள்ளும் தடந்தோள்களுடனும் வலிமை மிக்க கால்களுடனும் திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம் மக்கள் நலன் காக்கும் சாதனைத் திட்டங்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சியில் சட்டமன்றத்தில் எந்த அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் அது முந்தைய ஆட்சியைப் போல வெறும் மேசையைத் தட்டுவதற்கான அறிவிப்பாக மட்டும் இருப்பதில்லை. அறிவிக்கப்பட்டவை செயல்வடிவம் பெறவேண்டும் என்ற உறுதியுடன், கடைக்கோடி கிராமம் வரை அது சென்று சேரும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் ஓய்வதில்லை. தமிழ்நாடு அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மக்களுக்குப் பலன் தரும் பல்வேறு அறிவிப்புகள் வெளியான நிலையில், அந்தந்த துறை சார்பிலான மானியக் கோரிக்கைகளுடன் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல நிகழ்வுகள் நிறைவேறியும் பதிவாகியும் உள்ளன. தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல. மாநில உரிமைகளுடனான கூட்டுறவுக் கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தியாகும். அரசியல் சட்ட மாண்பினைக் காக்கும் செயல்பாட்டுடன் இந்தியாவின் பாதுகாவலனாகவும், தமிழ்நாட்டிற்குள் மதவாத அரசியல் தலையெடுக்காமல் தடுக்கும் அரணாகவும் உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் இறுதி வரை உறுதியாக நிற்பேன்.

நம்முடைய இந்த உறுதியை சிறு சிறு சலசலப்புகளால் குலைத்துவிட முடியுமா என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் முயற்சி செய்து பார்த்தனர். சட்டம் - ஒழுங்கு தொடர்பாக அங்கொன்றும் இங்கொன்றுமான நிகழ்வுகள், தனி மனித விரோதங்களால் ஏற்பட்ட பழிக்குப்பழிகள் இவற்றை முதன்மை எதிர்க்கட்சியும் அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பவர்களும் பூதாகரமான பிரச்சினையைப் போல காட்ட முயன்று தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்க நினைத்தாலும், அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரப்பூர்வமான பதில்கள் பேரவையில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டன.

சட்டமன்றம் என்பது சத்தமன்றம் அல்ல. ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும், எதிர்க்கட்சியினராக இருந்தாலும், தோழமைக் கட்சியினரும் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நலனுக்கான ஆரோக்கியமான விவாதங்களை முன்வைக்கின்ற இடமாக இருக்க வேண்டும் என்பதில் பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானதிலிருந்தே திராவிட முன்னேற்றக் கழகம் தெளிவுடன் செயல்பட்டு வருகிறது. அனல் பறக்கும் வாதங்களில் கடுஞ்சொற்கள் எந்தத் தரப்பிலிருந்து வெளிப்பட்டாலும், அந்த நிலை தொடரக்கூடாது என்பதில் எப்போதும் நான் அக்கறையுடன் இருக்கிறேன். இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலும் அந்த நிலை கடைப்பிடிக்கப்பட்டது.

உயிர்நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே, உங்களில் ஒருவன் தலைமையிலான இந்த ஆட்சியின் ஜனநாயகப் போக்கினை, ‘நாகரிக ‘ அரசியல்‘ என்கிற உங்களின் மனக்குரல் எனக்கும் கேட்கிறது. இந்த இயக்கத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணாவும், கட்டிக்காத்த முத்தமிழறிஞர் கலைஞரும், அவருக்கு உறுதுணையாக இருந்த இனமானப் பேராசிரியர் அவர்களும் உங்களால் தலைவனாக்கப்பட்ட - மக்களால் முதலமைச்சராக்கப்பட்ட எனக்குக் கற்றுத் தந்த பண்புகளல்லவா?

ஆம்.. நாம் நாகரிகமாகத்தான் நடந்து கொள்கிறோம். நம்மில் யாரேனும் நாகரிகத்தின் எல்லையைக் கடந்தால் நடவடிக்கை எடுக்கவும் தயங்குவதில்லை. இது நம் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களிடம் நாம் வெளிப்படுத்தும் பொறுப்புணர்வு. ஜனநாயக நாட்டில் மக்களே எஜமானர்கள். நாம் அவர்களின் சேவகர்கள். ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளாக ஜனநாயகப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

சட்டமன்றக் கூட்டத் தொடரின் நிறைவு நாளில் நான் குறிப்பிட்டேன். “மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் மதில் சுவர்கள் என்பது போல ஒரு பக்கம் ஒன்றிய அரசு, மறுபக்கம் ஆளுநர், நிதி நெருக்கடி எனப் பல தடைகளைத் தாண்டி சாதனை படைத்து வருகிறோம்” என்று. திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்கொள்ளாத நெருக்கடிகள் இல்லை. சந்திக்காத சவால்கள் கிடையாது. சாதிக்காத திட்டங்கள் கிடையாது.

இதை நீங்கள் இத்தனை காலம் உணர்ந்திருப்பதுபோல, இப்போது பொதுமக்களும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். தி.மு.க என்பது தமிழ்நாட்டின் நலனை மட்டுமின்றி, இந்தியாவின் ஜனநாயகத்தையும் காக்கின்ற இயக்கம் என்பதை எதிரிகளின் மனசாட்சியும் சொல்லும். தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும். மக்களின் பேராதரவுடன் தி.மு.கவே மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமரும். இவ்வாறு தனது கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.