அவசர வாழ்க்கை முறையால் ஏற்படும் மன அழுத்தம், கவலை, தூக்கமின்மை போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும் செயலியாக செயல்படுகிறது காம் செயலி (Calm App). குறிப்பாக பெண்களின் வாழ்க்கையில் வேலை, குடும்பம், தனிப்பட்ட பொறுப்புகள் ஆகியவை ஒன்றாக சேரும்போது உருவாகும் மன அழுத்தத்தை சமாளிக்க இந்தச் செயலி உதவுகிறது.இந்த செயலியின் அடிப்படை மனதை அமைதிப்படுத்துவது. அதற்கான வழிகாட்டுதலுடன் தியானப் பயிற்சிகள் இதில் வழங்கப்படுகின்றன. ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கும் புரியும் வகையில் மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்ட இந்த பயிற்சிகள், சில நிமிடங்களில் மனதை சீராக்கும் திறன் கொண்டவை. தினமும் சில நிமிடங்கள் இதை பயன்படுத்துவது மன அழுத்தத்தை குறைப் பதோடு, கவனக்குறைவு மற்றும் மனச் சிதறலை கட்டுப்படுத்த உதவுகிறது.
தூக்கமின்மை என்பது பல பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்னை. இதற்கு தீர்வாக காம் செயலியில் தூங்குவதற்கான கதைகள் (Sleeping Stories) வழங்கப்படுகின்றன. மென்மையான, அன்பான குரலில் சொல்லப்படும் இந்த கதைகள் மனதை தளரச்செய்து ஆரோக்கியமான தூக்கத்தை தருகின்றன. அதேபோல், மழை, கடல் அலை, காற்றின் சத்தம் போன்ற இயற்கை ஒலிகள் மனதை ஓய்வூட்டும் சூழலை உருவாக்கும் என்பதால் அந்த ஒலிகளும் இந்தச் செயலியில் உண்டு. மூச்சுப் பயிற்சிகள் இந்த செயலியின் முக்கிய அம்சம். நமது மூச்சை கட்டுப்படுத்துவதன் மூலம் உடலிலும் மனதிலும் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க முடியும். சீரான மூச்சுப் பயிற்சிகள் உடனடி அமைதியையும் நீண்டகால மனநல நலன்களையும் தருகின்றன. தினசரி வாழ்க்கையில் சில நிமிடங்கள் இதற்காக செலவிடுவது உடல் மற்றும் மனதின் சமநிலையை பேண உதவுகிறது.கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் சிறப்பு ஆலோசனைகளும் இதில் உள்ளன. வேலைப்பளு அதிகமான நாட்களில் அல்லது மனம் சோர்வாக இருக்கும் நேரங்களில் இந்த ஆலோசனைகள் மனதை மீண்டும் புத்துணர்ச்சியுடன் செயல்பட வைக்கின்றன.
