Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஒவ்வொரு கல்லூரிப் பாடத்திட்டத்திலும் நிதிசார் கல்வியறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும்: ஹிமான்சு வியாபக்

ஒவ்வொரு கல்லூரிப் பாடத்திட்டத்திலும் நிதிசார் கல்வியறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும் என CIEL-இன் நிர்வாக இயக்குநர் மற்றும் FinX-இன் தலைமைச் செயல் அதிகாரி ஹிமான்சு வியாபக் தெரிவித்துள்ளார்.

ஜென் இசட் (Gen Z) தலைமுறையினருக்கு பணத்தைப் பற்றிய முதல் பாடங்கள் வகுப்பறைகளிலோ அல்லது தகுதியான நிதி ஆலோசகர்களிடமிருந்தோ கிடைப்பதில்லை; இன்ஸ்டாகிராம் ரீல்கள், யூடியூப் சேனல்கள் மற்றும் டெலிகிராம் குழுக்கள் மூலமாகவே இவை குறித்த தகவலும், அறிவும் கிடைப்பது அதிகரித்து வருகிறது.

சமூக ஊடகங்கள் தனிநபர் நிதி குறித்த தகவல் அறிவை மிகவும் எளிதாகப் பெறக்கூடியதாக மாற்றியுள்ளன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவை நிதிசார்ந்த கல்விக்கும், முதலீட்டுக்கான ஆலோசனைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை மங்கச் செய்துள்ளன. சரிபார்த்து உறுதி செய்யப்படாத ஆன்லைன் உள்ளடக்க தகவல்களின் மீது அதிகரித்து வரும் இந்த சார்புநிலை, ஒழுங்குமுறைப்படுத்தும் நடவடிக்கைக்கான அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஃபைனான்சியல் டைம்ஸ் இதழின் சமீபத்திய அறிக்கையின்படி, பதிவு செய்யப்படாத "ஃபின்ஃப்ளூயன்சர்கள்" மீதான அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 2024 க்கும் மே 2026 க்கும் இடையில் இன்ஸ்டாகிராம், டெலிகிராம் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் 162,000 க்கும் மேற்பட்ட தவறான வழிகாட்டும் பதிவுகள் மற்றும் கணக்குகளை செபி (SEBI) நீக்கியுள்ளது அல்லது தடை செய்திருக்கிறது. இந்தியாவின் சில்லறை (ரீடெய்ல்) முதலீட்டாளர் தளம் 2019 - ம் ஆண்டுக்குப் பிறகு, மும்மடங்கிற்கு மேல் அதிகரித்து 146 மில்லியன் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது என்றும், இது குறிப்பாக இளம் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தும் ஆலோசனைகளின் வழியாக, இழப்புகளுக்கு ஆளாகுபவர்களாக ஆக்குகிறது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தியா உலகின் மிகவும் மேம்பட்ட டிஜிட்டல் நிதிச்சூழல் அமைப்புகளில் ஒன்றை உருவாக்கியுள்ளது. இன்றைய காலத்தில் ஒரு மாணவர் டிஜிட்டல் முறையில் வங்கிக் கணக்கைத் தொடங்கலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம், யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம், ஆன்லைனில் காப்பீடு பாலிசியை வாங்கலாம். உடனடி கடன்களைப் பெறலாம் மற்றும் வெறும் ஸ்மார்ட்போனை மட்டுமே பயன்படுத்தி முதலீடு செய்யத் தொடங்கலாம். நிதி திட்டங்கள் முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாறிவிட்டன. இருப்பினும், நிதி அணுகல் வசதியின் வளர்ச்சிக்கு இணையாக நிதி மற்றும் முதலீடு குறித்த புரிதல் வளர்ச்சியடையவில்லை. கூட்டு வட்டி, கிரெடிட் ஸ்கோர்கள், வரிவிதிப்பு, பணவீக்கம், காப்பீடு அல்லது முதலீடு மற்றும் ஊக வணிகம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு போன்ற கருத்தாக்கங்களைப் புரிந்துகொள்ள பல இளைஞர்கள் இன்னும் அதிகம் சிரமப்படுகின்றனர்.

நிதிசார் முடிவுகள், வயது முதிர்ந்த நபர்களுக்காக ஒதுக்கப்பட்டவை என்பதாக இப்போது இல்லை என்பதால், இந்த இடைவெளி அதிகரித்த முக்கியத்துவம் பெறுவதாக மாறியிருக்கிறது. இன்றைய மாணவர்கள் இன்டர்ன்ஷிப்கள், சுயதொழில் பணி மற்றும் கிரியேட்டர் பொருளாதாரங்கள் மூலம் சம்பாதிக்கிறார்கள். டிஜிட்டல் வாலட்டுகளை நிர்வகிக்கிறார்கள். நண்பர்களுடன் செலவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள், ஆன்லைன் சேவைகளுக்கு சந்தா செலுத்துகிறார்கள். மேலும் தங்களது முதல் முழுநேரச் சம்பளத்தைப் பெறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே நிதி தொடர்பான முடிவுகளை சுதந்திரமாக தாங்களே மேற்கொள்கிறார்கள்.

அதிகப்படியான கடன் வாங்குதல், நினைத்தவுடன் ஆராயாமல் முதலீடு செய்தல் அல்லது டிஜிட்டல் மோசடிகளுக்கு ஆளாவது போன்ற வாழ்க்கையின் ஆரம்பத்தில் எடுக்கப்படும் மோசமான நிதி முடிவுகள், நிதி ஆதரவை நீண்டகாலத்திற்கு பாதிக்கும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இந்த தேவையை உணர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பிற நிதித்துறை ஒழுங்குமுறை நிறுவனங்களின் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்ட தேசிய நிதிக் கல்விக்கான உத்தி (NSFE) 2020-2025, நிதி கல்வியறிவை அவசியமான ஒரு வாழ்க்கைத் திறனாக அடையாளம் காட்டுகிறது.

முக்கியமாக, உள்ளடக்கம், திறனறிவு, சமூகம், தகவல்தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகிய "5C" கட்டமைப்பின் மூலம் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் முழுவதும் நிதி குறித்த பாடங்களின் மூலம் கற்பிக்க இந்த வழிகாட்டல் வலியுறுத்துகிறது. நிதி கல்வியறிவு என்பது, ஒரு விருப்பத்தேர்வின் கீழ் எடுக்கப்படும் விழிப்புணர்வு முன்னெடுப்பாக இல்லாமல் முறையான கல்வி திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற வேண்டும் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இருப்பினும், இந்த உரையாடல் கல்லூரி அளவில் மட்டும் தொடங்குவதாக இருக்கக்கூடாது. வாழ்நாள் முழுவதற்கும் தேவையான நிதிசார் பழக்கவழக்கங்களையும், பயனுள்ள திறன்களையும் உருவாக்குவதில் பள்ளிகளுக்கும் சமஅளவிலான முக்கியப் பங்கு இருக்கிறது. வயது பிரிவிற்கு ஏற்ற நிதிசார் கல்வியானது, மாணவர்களுக்கு தேவைகளை ஆசைகளிலிருந்து வேறுபடுத்தி, பிரித்து கண்டறிதல், சேமிப்பின் முக்கியத்துவம், பட்ஜெட் தயாரித்தல், பொறுப்பான டிஜிட்டல் பணம் செலுத்தல்கள் மற்றும் பணத்தின் மதிப்பை சரியாகப் புரிந்துகொள்வது போன்ற கருத்தாக்கங்களை பள்ளி மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்த முடியும். மாணவர்கள் கல்லூரியில் நுழையும் போதே, அவர்கள் ஏற்கனவே ஒரு அடிப்படையான நிதிசார் அறிவினையும், புரிதலையும் கொண்டிருக்க வேண்டும்; அப்போது தான் அத்தகைய அடித்தளத்தின் மீது மேலும் மேம்பட்ட கருத்தாக்கங்களை உருவாக்கி செயல்படுத்த அவர்களால் முடியும்.

கல்லூரி அளவில் வழங்கப்படும், நிதி கல்வியறிவு பங்குச் சந்தையைப் புரிந்துகொள்வது என்பதையும் கடந்து, மிக தொலைவிற்கு விரிவுபடுத்தப்பட வேண்டும். எந்த துறையாக இருப்பினும், ஒவ்வொரு பட்டதாரி மாணவரும், தனிநபர் பட்ஜெட்டை எவ்வாறு தயாரிப்பது, அவசரகால நிதியை உருவாக்குவது, கல்விக் கடன்களை மதிப்பிடுவது, சம்பள கட்டமைப்புகள் மற்றும் வரிவிதிப்பைப் புரிந்துகொள்வது, ஆரோக்கியமான கடன் வரலாற்றைப் பேணுவது, பொருத்தமான காப்பீடு திட்டத்தை தேர்ந்தெடுப்பது, டிஜிட்டல் நிதி மோசடிகளை அடையாளம் காண்பது மற்றும் சிறப்பான, நீண்ட கால முதலீட்டின் ஆதாயங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவது எப்படி என்பதை அறிந்திருக்க வேண்டும். இவை நிதி நிபுணர்கள் மட்டுமே அறிந்திருக்க வேண்டிய சிறப்பு நிதித் திறன்கள் அல்ல; அவை ஒவ்வொரு இளவயது நபரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் பயனடைவதற்கு அவசியமான வாழ்க்கைத் திறன்களாகும்.

நிதி கல்வியறிவு எவ்வாறு கற்பிக்கப்படுகிறது என்பதும் சம முக்கியத்துவம் வாய்ந்தது. கோட்பாட்டு விரிவுரைகளை ஒரு செமஸ்டரில் மட்டுமே நடத்துவது அவர்களின் நிதிசார் நடத்தை மீது தாக்கம் ஏற்படுத்த வாய்ப்பில்லை. பட்ஜெட் உருவகப்படுத்தல்கள், முதலீட்டு விளையாட்டுகள், நிதி திட்டமிடல் தொடர்பான நேர்வு ஆய்வுகள், தொழில்முனைவுத்திறன் சவால்கள், வினாடி வினா போட்டிகள் மற்றும் நிஜ உலக சூழ்நிலைகளில் கருத்தாக்கங்களைப் பயன்படுத்த மாணவர்களை ஊக்குவிக்கும் நிதி கல்வியறிவு போட்டிகள் மூலம் நேரடி அனுபவ வழி கற்றலை கல்வி நிறுவனங்கள் சாத்தியமாக்க வேண்டும். நடைமுறை அனுபவ ரீதியிலான ஈடுபாடே நிதி அறிவை, நிதிசார் செயல்பாடுகளின் மீது நம்பிக்கையாக மாற்ற உதவுகிறது.

இதற்கு தேசிய அளவிலான உள்ளது. நம் நாட்டில் இளைய தலைமுறையினர், கல்வித் தகுதிகள் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மட்டும் கொண்டிருக்காமல், நிதித் திறனையும் பெற்றிருந்தால் மட்டுமே இந்தியா மக்களின் முழுத்திறனும் வெளிப்படுவது சாத்தியமாகும். நிதி ரீதியான கல்வியறிவு கொண்ட குடிமக்கள் பொறுப்புடன் செல்வத்தை உருவாக்கவும், கடன் பொறிகளில் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்கவும், நிதி மோசடிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தகவலறிந்த முதலீட்டு முடிவுகளை எடுக்கவும் சிறந்த முறையில் தயாராக இருப்பார்கள். நிதி விழிப்புணர்வுள்ள நுகர்வோர் வலுவான வீட்டு நிதியை சிறப்பாக நிர்வகிப்பது, ஆரோக்கியமான மூலதன சந்தைகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதாரத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள்.

சமூகத்தின் மாறிவரும் தேவைகளைப் பிரதிபலிக்கும் வகையில் வகுப்பறைகள் எப்போதும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. தொழில்நுட்பமே வாழ்க்கைப்பணியை (கரியர்) வடிவமைப்பதால் இன்றைய மாணவர்கள் கோடிங் செய்வது எப்படி என கற்றுக்கொள்கின்றனர். ஒத்துழைப்பும் விமர்சன சிந்தனையும் நவீன பணியிடத்தில் அத்தியாவசிய அம்சங்களாக இருப்பதால், மாணவர்கள் தகவல் தொடர்பு மற்றும் பகுப்பாய்வுத் திறன்களை வளர்த்துக் கொள்கிறார்கள். நிதி கல்வியறிவுக்கும் அதே அங்கீகாரம் வழங்கப்படுவது அவசியம். ஏனெனில் ஒவ்வொரு தனிநபரும், தொழில் / பணி எதுவாக இருப்பினும், வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் பணம் ஈட்டுகின்றனர், செலவிடுவார்கள், சேமிக்கின்றனர், கடன் வாங்குகின்றனர், காப்பீட்டை செய்கின்றனர் மற்றும் முதலீடு செய்கின்றனர்.

அதிகரித்து வரும் டிஜிட்டல் முறையிலான மற்றும் நிதி ரீதியாக அதிநவீன பொருளாதாரத்திற்காக அடுத்த தலைமுறையை இந்தியா தயார்படுத்தும்போது, ​​நிதி கல்வியறிவு இனி பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு செயல்பாடாகவோ அல்லது விருப்பத்தேர்வின் கீழ் பங்கேற்கும் ஒரு விழிப்புணர்வு திட்டமாகவோ இருக்க முடியாது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான அனைத்து பாடத்திட்டத்திலும் இது ஒரு நிரந்தர இடத்தைப் பெறுவதற்கு தகுதியானது, ஏனெனில் பணத்தைப் புரிந்துகொள்வது ஒரு சிறப்புத் திறனாக இனிமேலும் கருதப்பட இயலாது;, வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒரு அடிப்படைத் திறனாக இருக்கிறது.