மகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்து பழகியதால் ஆத்திரம்; கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி கொன்ற மாஜி பஞ்.தலைவர்: பெரம்பலூர் அருகே பயங்கரம்
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே மகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்து பழகி வந்த கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி கொன்ற மாஜி பஞ்சாயத்து தலைவரை போலீசார் நேற்று கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வெண்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலு (எ) பாலசுப்ரமணியன் (45). முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர். அதே ஊரை சேர்ந்த காட்டு கொட்டகையை சேர்ந்த சரவணக்குமார் மகன் அபிமன்யூ (21). பெரம்பலூர் அருகே தனியார் கல்லூரியில் எம்சிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் அபிமன்யூ, ஏற்கனவே பாலசுப்ரமணியன் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்தபோது அவரது 14 வயதான மகளிடம் ஏற்பட்ட பழக்கத்தில் அவருக்கு செல்போன் வாங்கி கொடுத்ததோடு அதில் ரகசியமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் தெரிய வந்த பாலசுப்ரமணியன், அபிமன்யூ மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 10.15 மணி அளவில் அபிமன்யு வீட்டுக்கு பாலசுப்ரமணியன் சென்றார். அப்போது வீட்டில் அவரும், தாய் கீதா மற்றும் தம்பியும் இருந்தனர்.
இதையடுத்து அபிமன்யூவை, இரும்பு ராடால் தாக்கியதோடு கத்தியால் இடதுபக்க மார்பில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனையடுத்து பாலசுப்ரமணியன் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து தகவலறிந்த கை.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அபிமன்யூ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து பாலசுப்ரமணியத்தை நேற்று மதியம் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரம்பலூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுகையில் கார் டிரைவர் படுகொலை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் நாகூர்கனி (42). டிரைவரான இவர், வாடகை கார் ஓட்டி வந்தார். இவரது மனைவி கற்பகவள்ளி (37). இவர்களுக்கு காளிதாஸ்(17), ரித்திக் ராஜ்(12) என்ற 2 மகன்களும், பிரித்திகா (14) என்ற ஒரு மகளும் உள்ளனர். அறந்தாங்கி அருகே காட்டுக்குடி பிராமணவயலை சேர்ந்த சரண்ராஜ்(29). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சண்முகப்பிரியா (21). இவர் 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் வாடகைக்கு வீடு பார்க்கும்படி நாகூர் கனியிடம், அவரது நண்பர் சரண்ராஜ் கூறியுள்ளார். அப்பகுதியில் ஒரு வீடு இருப்பதாக நாகூர்கனி கூறினார். இதையடுத்து நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் சரண்ராஜ், அவரது மனைவி சண்முகப்பிரியா மற்றும் நாகூர்கனி சென்று வாடகை வீட்டை பார்த்தனர். இதில் சண்முகப்பிரியா வீட்டுக்கு வந்துவிட்டார். நண்பர்கள் இருவரும் வீட்டின் உரிமையாளரிடம் பேசி விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது நாகுடி கண்மாய் அருகே நாகூர்கனி, சரண்ராஜிடம் மது வாங்கி தரும்படி கூறினார்.
அதற்கு அவர் மறுத்து விட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சரண்ராஜ், பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய கத்தியால் நாகூர்கனி வயிறு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரி குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த நாகூர் கனியை, அப்பகுதியினர் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்தார். இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்கு பதிந்து சரண்ராஜை நேற்று கைது செய்தனர்.
மதுரை அருகே பிரபல ரவுடி முகம் சிதைத்து கொடூர கொலை
மதுரை மாவட்டம், சமயநல்லூர், சடச்சியம்மன் நகரை சேர்ந்தவர் நாகராஜன், இவரது மகன் சூர்யா (எ) குட்டி சாக்கு (26). இவர் மீது கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 26ம் தேதி ஒரு வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவில், சமயநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே பழைய ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சூர்யா முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்து சமயநல்லூர் போலீசார், சூர்யாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடைபெற்ற இடத்தை மதுரை எஸ்பி தேவநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்ட ரவுடி சூர்யாவுடன், செக்கானூரணி பன்னியானைச் சேர்ந்த அஜய் (26), பரவை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த விஷ்ணு (24), அஸ்வின் (23), ஊர்மெச்சிகுளத்தைச் சேர்ந்த செல்வகுமார் (25), சமயநல்லூர் காந்தி நகரை சேர்ந்த சந்துரு (எ) குட்டி (20) உள்ளிட்டோர் சேர்ந்து மது அருந்தியது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அனைவரும் ஒன்றாக மது அருந்தி கொண்டிருந்தபோது சூர்யாவுக்கும், அஸ்வினுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், 5 பேரும் சேர்ந்து சூர்யாவை கட்டை மற்றும்இரும்பு அடுப்பு ஆகியவற்றைக் கொண்டு கடுமையாக தாக்கி முகத்தை சிதைத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து சமயநல்லூர் போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.


