Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கல்லூரி மாணவர் கொலை! 5 மாணவர்கள் கைது.. மேலும் சிலரை தேடும் தனிப்படை போலீசார்..

கோவை: ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் அமுதன், சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உத்தரவின் பேரில், செட்டிப்பாளையம் காவல் ஆய்வாளர் செல்வராகவன் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இதுவரை அரவிந்தன், சிவரோகித், ஆராவமுதன், மணிபாலா மற்றும் 17 வயது சிறுவன் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ள தகவலின்படி, அமுதன் தனியார் விடுதியில் நண்பருடன் தங்கி இருந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று அதிகாலை, நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் அறைக்குச் சென்று அமுதன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நான்காம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் அமுதனை கல்லூரி அருகே உள்ள தனியார் இடத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த அமுதன் மீண்டும் தனது அறைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அமுதனின் உடலைப் பெற வந்த அவரது பெற்றோர், பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தனர். கல்லூரியில் இருந்து அமுதன் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது உண்மைதான் என்றும், கல்லூரியில் யார் யார் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர் என்பது குறித்த தகவல்களை கல்லூரி நிர்வாகம் அமுதனிடம் கேட்டுப் பெற்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அந்த தகவல்களை சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் அமுதன் தெரிவித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்திருக்கலாம் என்றும் பெற்றோர் குற்றம்சாட்டினர். தங்களது மகனின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையிலும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். போதைப் பொருள் தொடர்பான தகவல்களை தெரிவித்த மாணவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாகக் கூறிய அவர், அமுதனின் மரணத்திற்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தற்போது ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் மேலும் சில மாணவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, உயிரிழந்த அமுதனின் உடலை அவரது பெற்றோர் நேற்று பெற்றுக்கொண்டு கள்ளக்குறிச்சிக்கு எடுத்துச் சென்றனர். மாணவரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வந்து உரிய நீதி வழங்க வேண்டும் என்றும் அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.