சேலம்: சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று ஒரு ‘இ-மெயில்’ வந்தது. அதில், சேலம், கோவை, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் கோவை கமிஷனர் அலுவலகம் ஆகியவை பகல் 1 மணிக்கு வெடிக்கும். சக்திவாய்ந்த வெடி பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளது, எனக்கூறப்பட்டிருந்தது. இதுபற்றி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சேலம் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் தீவிர சோதனையை நடத்தினர். ஆனால், எங்கும் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. இதேபோல் கோவை, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலங்கள் மற்றும் கோவை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை செய்தனர்.
இதில் வெடிகுண்டுகள் ஏதுவும் சிக்கப்படாததால் மிரட்டல் புரளி என தெரியவந்தது. இந்த மிரட்டல் இ-மெயில் புரளியென தெரியவந்தது. மிரட்டல் இ-மெயிலில் மதுரையை சேர்ந்த ஒருவரது பெயரும், சென்னையில் ஒரு முகவரியை குறிப்பிட்டும், அங்கு ஒரு தெருவிற்கு பெயர் மாற்றம் மேற்கொண்டதை கண்டித்தும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. அதனடிப்படையில் சேலம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
