ஊட்டி : உல்லத்தி ஊராட்சி சார்பில் தலைகுந்தா, பைன் பாரஸ்ட் மற்றும் கல்லட்டி சாலையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் அகற்றப்பட்டன. நீலகிரி மாவட்டம் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரிக்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை பயன்படுத்தி விட்டு சாலையோரங்கள் வனப்பகுதிகளுக்குள் வீசி சென்று விடுகின்றனர். குறிப்பாக உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட தலைக்குந்தா முதல் பைன் பாரஸ்ட் வரையிலான சாலையோர பகுதிகள், கல்லட்டி மலைப்பாதையில் வீசி விடுகின்றனர். இவற்றை தூய்மைப்படுத்தும் நோக்கில் உல்லத்தி ஊராட்சி சார்பில் தொடர்ச்சியாக தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நேற்று ஊட்டி எச்பிஎப் முதல் கல்லட்டி மலைப்பாதை, தலைக்குந்தா முதல் பைன் பாரஸ்ட் வரையில் சாலையோரங்களில் கிடந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து வகையான குப்பைகளும் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன. ஊட்டிக்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் குப்பைகளை பொது இடங்களில் வீசி எறிய வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டது.
